169
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, தேசிய அணியில் விளையாடும் இரண்டு வீரர்களை உள்ளடக்கிய தனது அணியுடன் களமிறங்கிய போதும், களத்தடுப்புகளில் இழைத்த தவறுகளால் வெற்றியைத் தவறவிட்டது.
221 என்ற இலக்கை மத்திய கல்லூரி நிர்ணயிக்க, 48 பந்துப் பரிமாற்றங்களில் 8 இலக்குகளைப் பறிகொடுத்து வெற்றியைச் சுவைத்தது சென்.ஜோன்ஸ் கல்லூரி.
யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் இடையிலான 17ஆவது ஒரு நாள் ஆட்டம், சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தை முதலில் தேர்வு செய்தது.
மத்திய கல்லூரி அணி மந்தமாகவே ஆரம்பத்தில் ஓட்டங்களைச் சேர்த்தது. 24 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அந்த அணியின் முதலாவது இலக்குச் சரிக்கப்பட்டது. வடக்கின் பெருஞ் சமரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இயலரசன் 8 ஓட்டங்களுடன் அன்ரன் அபிசேக்கின் பந்துவீச்சில் வெளியேற்றப்பட்டார். களத்திற்குள் நுழைந்தார் இந்துஜன். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சாரங்கனுடன் இணைந்து சிறந்த இணைப்பாட்டத்தை கட்டியெழுப்பினார்.
இரண்டாவது இலக்குக்காக 49 ஓட்டங்கள் பகிரப்பட்ட நிலையில் இந்துஜன் 22 பந்துகளில் 22 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்திருந்த நிலையில் சரணின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 87 ஓட்டங்களை அணி பெற்றிருந்த வேளையில் சாரங்கன் 82 பந்துகளைச் சந்தித்து 36 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் கரிசனின் பந்துவீச்சில் பவிலியனுக்கு அனுப்பப்பட்டார்.
ஜெகதர்சன் 6 ஓட்டங்கள், அணித் தலைவரும் தேசிய அணியில் இடம்பிடித்த வீரரும், வடக்கின் பெருஞ்சமரில் சிறப்பாக ஆடியவருமான மதுசன் 38 பந்துகளில் 15 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் துரதிஷ்டவசமாக ‘ரன்அவுட்டாகி’ வெளியேறினார். தொடர்ந்து களம் கண்ட நிதுசன் 29 பந்துகளில் 32 ஓட்டங்களைப் விளாசிப் பெற்றுக் கொண்டார். அவரும் சரணின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க 163 ஓட்டங்களுக்கு 6 இலக்குகளை இழந்திருந்தது மத்திய கல்லூரி அணி. தேசிய அணியில் இடம்பிடித்த சுழற்பந்து வீச்சாளர் வியாஸ்காந் 16 பந்துகளில் 11 ஓட்டங்களுடன் சரணின் பந்து வீச்சில் வெளியேற்றப்பட்டார். பின்வரிசையில் குஜசதுஸ் 30 பந்துகளில் 26 ஓட்டங்களையும், ராஜ்கிளின்ரன் 22 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்கவும், சென்.ஜோன்ஸ் கல்லூரி 39 ஓட்டங்களை உதிரிகளாக வழங்கவும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 46 பந்துப் பரிமாற்றங்களில் 221 ஓட்டங்களுக்குள் சகல இலக்குகளையும் இழந்தது.
பந்து வீச்சில் சென்.ஜோன்ஸ் கல்லூரி சார்பில் அன்ரன் அபிசேக் 8 பந்துப் பரிமாற்றங்களில் 37 ஓட்டங்களைக் கொடுத்து 4 இலக்குகளையும், சரண் 10 பந்துப் பரிமாற்றங்கள் வீசி ஒரு ஓட்டமற்ற பந்துப் பரிமாற்றம் உள்ளடங்கலாக 21 ஓட்டங்களைக் கொடுத்து 3 இலக்குகளையும் கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு 222 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களம் கண்டது சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி. அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அணி 9 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் முதலாவது இலக்கு வீழ்த்தப்பட்டது. இரண்டாவது இலக்குக்கு சௌமியனுடன் இணைந்து சுகேதன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 62 ஓட்டங்கள் இணைப்புக்காக பகிரப்பட்டது. 59 பந்துகளில் 18 ஓட்டங்களைப் பெற்றிருந்த சௌமியன், நிதுசனின் பந்து வீச்சில் பவிலியனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஹேமதுசன் வந்த வேகத்தில் வெளியேற 80 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளை அணி இழந்திருந்தது. சுகேதன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். மறுமுனையில் நுழைந்த அபினாசும் காத்திரமான பங்களிப்பை வழங்கினார். 83 பந்துகளில் 61 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் சுகேதன், விதுசனின் பந்து வீச்சில் வீழ்ந்தார். அபினாஸ் – ஹரிசன் இணை 5 ஆவது இலக்குக்காக சிறப்பாக ஆடியது. மத்திய கல்லூரியின் வெற்றிக் கனவை சிதைக்கும் வகையில் இந்த இணையின் ஆட்டம் அமைந்தது. 71 ஓட்டங்களை இணைப்பாக பெற்றிருந்த நிலையில் வியாஸ்காந் அதனைப் பிரித்தார். ஹரிசன் 23 ஓட்டங்களுடன் வெளியேறினார். சிறப்பாக ஆடி அரைச் சதம் கடந்த அபினாசும் சிறிது நேரத்திலேயே வீழ்த்தப்பட்டார். 38 பந்துகளில் 36 ஓட்டங்கள் வெற்றிக்குத் தேவை என்ற இக்கட்டான நிலையில் இலக்குச் சரிக்கப்பட்டது.
வடக்கின் பெருஞ்சமரில் முதல் இன்னிங்ஸில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியை சரிவிலிருந்து மீட்ட டினோசன் களமிறங்கினார். மறுமுனையில் இலக்குகள் சரிந்தாலும் அதனைப் பொருட்படுத்தாது அடித்தாடினார். 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 12 பந்துகளில் 24 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் அவர் விளாச, 48 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 8 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது
சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி.
பந்து வீச்சில் அணித் தலைவர் மதுசன், 9 பந்துப் பரிமாற்றங்கள் வீசி 24 ஓட்டங்களைக் கொடுத்து 3 இலக்குகளையும், விதுசன் 9 பந்துப் பரிமாற்றங்கள் வீசி 32 ஓட்டங்களுக்கு 2 இலக்குகளையும் கைப்பற்றினார்கள். ஆட்டநாயகனாக சுகேதன் தெரிவானார்.
படங்கள் – ஐ.சிவசாந்தன்
Spread the love