குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாதகல் பகுதியிலுள்ள வீடொன்றினை உடைத்து சுமார் 15 பவுண் தங்க நகைகளைத் திருடிய சந்தேக நபரை யாழ் நகரில் வைத்து கைது செய்துள்ளதாக காவல்துறையினர்; தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து திருட்டுப் போன நகைகள் சிலவும் திருட்டு நகை ஒன்றை நிதி நிறுவனத்தில் அடகு வைத்து எடுத்த 37 ஆயிரத்து 500 ரூபா பணமும் மீட்கப்பட்டது என்றும் காவல்துறையினர்; தெரிவித்தனர்.
மாதகல் நாவலர் வீதியில் அமைந்துள்ள வீடொன்று நேற்றுக்காலை உடைக்கப்பட்டு சுமார் 15 பவுண் தங்க நகைகள் திருட்டுப் போயிருந்தன. வீட்டிலுள்ளவர்கள் ஆலயத்துக்குச் சென்றிருந்த போதே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் இளவாலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதேவேளை, யாழ்ப்பாணம் நகரில் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடிய ஒருவரை யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மாதகல் பகுதியில் திருடபட்ட நகைகளை அடகுவைக்க யாழ்ப்பாண நகருக்கு வந்ததாக தெரிவித்த சந்தேகநபர், திருட்டு நகைகளின் ஒரு பகுதியை காவல்துறையினரிடம் வழங்கினார்.
அத்துடன், சுமார் ஒரு பவுண் நிறையுடைய நகையை யாழ்ப்பாணம் நகரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்துப் பெற்றுக்கொண்ட 37 ஆயிரத்து 500 ரூபா பணமும் பற்றுச்சீட்டும் சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டது.
யாழ்ப்பாணம் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் தினேஷ் கருணாநாயக்கவின் கட்டுப்பாட்டிலுள்ள சிறப்புக் குற்றத் தடுப்புக் காவல்துறையினர்; சந்தேகநபர் இளவாலைக் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்