வடக்கு, கிழக்கில் யுத்தம் நிலவிய போதும் காடுகள் பாதுகாக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திம்புலாகல, வேஹெரகல மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சர்வதேச வன தின நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் காடழிப்பை தடுப்பதற்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்படாவின், எதிர்வரும் 15 வருடங்களில் நாட்டில் காடுகள் இல்லாது போகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாட்டில் எஞ்சியுள்ள வனத்தில் 28 வீதமானவை வடக்கு, கிழக்கு பகுதிகளிலேயே காணப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அத்துடன் வடக்கு, கிழக்கில் யுத்தம் நிலவிய போதும் காடுகள் பாதுகாக்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
எனினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் அரசியல்வாதிகள் மற்றும் மரக்கடத்தற்காரர்களால் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நாட்டின் வனப்பகுதியை 32 வீதமாக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரச, தனியார், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பாடசாலை சமூகம் என்பன ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது வலியுறுத்தியுள்ளார்.