தி.மு.க தலைவர் மு.கருணாநிதி தலைமையில் ஜனவரி 4-ம் தேதி திமுக பொதுக்குழு நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 4-1-2017 அன்று புதன்கிழமை காலை 9.00 மணி அளவில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
திராவிட முன்னேற்றக் கழக ஆக்கப்பணிகள் மற்றும் தணிக்கைக்குழு அறிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 20-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருந்தது. திமுக தலைவர் கருணாநிதிக்கு சளித் தொந்தரவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
2016-ம் ஆண்டில் திமுக பொதுக்குழு கூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கருணாநிதி கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காத நிலையில் அவரது தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை அரசியலில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.