அவுஸ்ரேலியாவின் முப்படைகள் , கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் இலங்கை சென்றுள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தின் கடலோர பாதுகாப்பு தொடர்பில் ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறு அவுஸ்ரேலிய முப்படைகள் இலங்கை சென்றுள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை முப்படைகள் ஒன்றிணைந்து அனர்த்த முகாமைத்துவம். கடற்பிராந்திய தந்திரோபாயம் மற்றும் இராணுவ பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதுடன் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கையிலும் ஈடுபடவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அவுஸ்திரேலிய கடற்படைக்குச் சொந்தமான எச்.எம்.ஏ.எஸ். கன்பரா மற்றும் எச்.எம்.ஏ.எஸ். நியூகேஸ்லி ஆகிய கப்பல்கள் நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ள நிலையில் , எச்.எம்.ஏ.எஸ். பராமற்ற மற்றும் எச்.எம்.ஏ.எஸ். சக்ஸஸ் ஆகிய இரு கப்பல்களும் திருகோணமலைத் துறைமுகத்தை சென்றடைந்துள்ளன.
அத்துடன் அவுஸ்திரேலிய விமானப்படைக்கு சொந்தமான விமானமொன்று மத்தள விமான நிலையத்தினை செனந்றடைந்துள்ளதாகவும் அவுஸ்திரேலியா உயரிஸ்தானிகர் காரியாலயம் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டம் மற்றும் தடையற்ற வர்த்தக பாய்ச்சல்கள் ஆகியவற்றிற்கு உறுதியளிக்கும் வகையில் செயற்படுவதற்கான பயிற்சியாக இந்த செயற்திட்டம் அமையும் என அவுஸ்திரேலியா உயரிஸ்தானிகர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.