தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுடன் விடுபட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும்படி உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் எதிர்வரும் வரும் 18-ம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படவுள்ளதுடன் வெற்றிடமாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
எனினும் தேர்தல் வழக்குகளை காரணம் காட்டி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்படவில்லை.
தற்போது இந்த மூன்று தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்துவிட்டதால், தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை. இதையடுத்து 3 தொகுதிகளிலும், ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் 3 தொகுதிகளில் ஏப்ரல் 18-ம் திகதி வாக்குப்பதிவு நடத்த முடியுமா என தேர்தல் ஆணையகத்திடம் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டதற்கு அவசர கதியில் தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையகம் தெரிவித்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றம், குறித்த 3 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ம் திகதி தேர்தல் நடத்தும்படி உத்தரவிட முடியாது என தெரிவித்தது.