தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் 28 கிலோ மீற்றர் தூரத்தை 10 மணி நேரத்தில் நீந்தி கடந்து சிறுவன் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார். தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த 4ம் வகுப்பில் கல்வி கற்று வரும் 10 வயதான ஜெய் ஜஸ்வந்த் என்பவரே இவ்வாறு சாதனை புரிந்துள்ளார் இலங்கை தலைமன்னாரில் இருந்து ராமேசுவரம் தனுஷ்கோடி வரை 28 கிலோ மீற்றர் தூரத்தை கடலில் நீச்சல் அடித்து கடக்கும் சாதனையை இவர் நிகழ்த்தி உள்ளார்.
ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை சிறுவன் ஜெய் ஜஸ்வந்த், பயிற்சியாளர் உள்பட 14 பேர் கொண்ட குழுவினர் ஒரு மீன்பிடி விசைப்படகு மூலமாக தலைமன்னாருக்கு சென்று பின்னர் இலங்கை தலைமன்னார் ஊர்மலை என்ற பகுதியில் இருந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு ஜெய் ஜஸ்வந்த் கடலில் நீந்த தொடங்கியிருந்தார்.
இந்தநிலையில் இந்திய கடல் எல்லையை காலை 9.45 மணிக்கு கடந்த அவர், அங்கிருந்து தொடர்ந்து நீச்சல் அடித்து பகல் 2.30 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை வந்தடைந்துள்ளார். 28 கிலோமீற்றர் தூரத்தை சரியாக 10 மணி 30 நிமிட நேர்த்தில் கடந்து சிறுவன் ஜெய் ஜஸ்வந் உலக சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.