பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் இலவசக் கழிவறை வசதியை ஏற்படுத்தக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தா பொதுநல மனுவில் தமிழகம் முழுவதும் குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் செய்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கழிவறை ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நேற்றையதினம் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் டெல்லியில் பொது கழிவறைகள் சுத்தமாக உள்ளதாகவும், அங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்த நீதிபதிகள் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழு ஒன்றினை அமைத்து அதன் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து, தமிழகத்தில் அதுபோன்று நடைமுறைப்படுத்தலாம் எனத் தெரிவித்தனர்.
மேலும், பேருந்து நிலையம், கோயில் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கட்டணமில்லாக் கழிவறைகள் அமைப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்