குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணம் மாநகர மத்திய பேருந்து நிலையத்தைச் சூழ வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள் தமக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி அமைதிவழிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபை முன்றலில் அவர்கள் இந்தப் போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்தனர்.
யாழ்ப்பாணம் மாநகர மத்திய பேருந்து நிலையத்தை நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நவீன முறையில் மேம்படுத்தப்படவுள்ளது.
அதனால் அதன் பணிகளை ஆரம்பிக்க உள்ள நிலையில் பேருந்து நிலையத்தைச் சூழ பழக்கடைகள் உள்ளிட்ட வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் 63 வியாபாரிகளை வரும் 30ஆம் திகதியுடன் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு யாழ்ப்பாணம் மாநகர சபை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் 63 வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் எடுத்து மாற்று இடத்தை ஒதுக்கித் தருமாறு கோரி வியாபாரிகள் அமைதிவழிப் போராட்டத்தை இன்று ஆரம்பித்தனர்.
தமது கோரிக்கையை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் நிறைவேற்றும் வரை தமது போராட்டம் தொடரும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.