குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த வாரம் ஏமாற்றித் தன்னிடம் தங்கச் சங்கிலியை அபகரித்த நபரை நேற்று காவல்துறையினரிடம் பிடித்துக் கொடுத்த மூதாட்டி, அம்மனின் கிருபையால் தான் திருடனை பிடிக்க முடிந்தது என கூறினார். கடந்த பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவத்துக்காக அச்சுவேலியிலிருந்து மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் கோவிலுக்கு மூதாட்டி ஒருவர் தனது மகனுடன் சென்றுள்ளார்.
அங்கு ஆலய வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருண்ந்த வேளை அவரை உடனடியாக அறிவித்தல் பந்தலுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் அங்கு சென்றபோது, அங்கு நின்ற ஒருவர் உங்களின் மகன் விபத்தில் சிக்கி காயமடைந்து சாவகச்சேரி மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டுள்ளார். மருத்துவச் செலவுக்கு பணம் தர வேண்டும் என்று அங்கு நின்றவர் கேட்டுள்ளார்.
மகன் விபத்தில் சிக்கினார் என்ற பதற்றத்தில் பணம் இல்லையெனக் கூறி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுண் தங்கச் சங்கிலியை கழற்றிக் கொடுத்துள்ளார். சங்கிலியை வாங்கியவர் அவசரமாக அங்கிருந்து சென்றுள்ளார்.
அதன் பின்னர் சிறிதுநேரத்தில் அங்கு மகன் வந்தார். மகனை கண்டதும் தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதனை அறிந்து கொண்டார்.
இந்நிலையில் பங்குனித் திங்கள் நான்காம் திங்களான நேற்று மூதாட்டியும் மகனும் கோவிலுக்கு வந்து வழிபட்டுக் கொண்டிருந்த வேளையில் சங்கிலியை வாங்கிய நபர் அங்கு நின்றுள்ள நிலையில் அவரை அடையாளம் கண்டு கொண்ட மூதாட்டி மகனிடம் கூறியுள்ளார்.
மகன் அந்த நபரைப் பிடித்து அங்குள்ள காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். காவல்துறையினரின் விசாரணையில் மூதாட்டியிடம் சங்கிலியை வாங்கியதை அந்த நபர் ஒப்புக் கொண்டார் என்றும், அதையடுத்து அந்த நபரைக் காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேவேளை கடந்த திங்கட்கிழமை தன்னை ஏமாற்றி தன்னுடைய 3 பவுண் சங்கிலியை அபகரித்து சென்றதையடுத்து , அம்மனிடம் மனம் உருகி மன்றாடி வேண்டினேன். இந்த கிழமை அம்மன் எனக்கு அந்த திருடனை பிடித்து தந்துள்ளார். அதற்கு அம்மனின் கிருபையே காரணம் என மூதாட்டி அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தார்.