Home இலங்கைஆனல்ட் – கேசவனுக்கு பாதுகாப்பு வழங்குமளவுக்கு அச்சுறுத்தல் இல்லை

ஆனல்ட் – கேசவனுக்கு பாதுகாப்பு வழங்குமளவுக்கு அச்சுறுத்தல் இல்லை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோருக்கு காவல்துறைப் பாதுகாப்பு வழங்குமளவுக்கு அச்சுறுத்தல்கள் எவையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சுக்கு யாழ்.மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவால் அறிக்கையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் போதியளவு  காவல்துறைப் பாதுகாப்பு வழங்குமாறு யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சுக்கும் காவல்துறைத் திணைக்களத்துக்கும் கடிதம் மூலம் கோரியிருந்தனர்.

இவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் தான் யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் போது மேலதிக பாதுகாப்பை கோரியிருந்தார்.

மூவராலும் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்ட விண்ணப்பங்கள் மேலதிக தகவல்களுக்காக யாழ்ப்பாணத்திலுள்ள பிரிவுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவை தொடர்பில் ஆராயப்பட்டன.

விண்ணப்பதாரிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள், அவை தொடர்பில் காவல்நிலையங்களில் வழங்கப்பட்ட முறைப்பாடுகள், அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தன. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்திலும் விசாரிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் காவல்துறைப் பாதுகாப்பு வழங்கப்படவேண்டிய பாராதூரமான அச்சுறுத்தல்கள் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட், மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோருக்கு இல்லை என பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகத்துக்கு போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது குடும்பம் வசிக்கும் இல்லத்துக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு கடந்த ஆண்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் அவரது கிளிநொச்சி அலுவலகத்திற்கு ஏற்கனவே 6 காவல்துறைப உத்தியோகத்தர்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சி.தவராசா ஆகியோரால் காவல்துறை பாதுகாப்புக் கோரப்பட்டு முன்வைக்கப்பட்ட விண்ணப்பமும் பாதுகாப்பு அமைச்சால் கடந்த ஆண்டில் நிராகரிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More