யாழில்.கடந்த சில மாதங்களாக கடும் வெயிலான கால நிலை நிலவி வந்த நிலையில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் யாழ்.நகரை அண்டிய புறநகர் பகுதிகளில் மழை வீழ்ச்சி காணப்பட்டது.
கடும் வெப்பத்தால் மக்கள் தவித்து வந்த நிலையில் பலத்த இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. நேற்றைய தினம் 7.1 மில்லி மீற்றர் மழை பெய்த்துள்ளது என வானிலை அவதான நிலையத்தின் யாழ்.பிராந்திய காரியாலயம் தெரிவித்துள்ளது.
அதேவேளை வடக்கில் இடை நிலை பருவ பெயர்ச்சி ஆரம்பித்துள்ளதாகவும் , அதனால் மாலை வேளைகளில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உண்டு. குறிப்பாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அதிகளவான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மாலை வேளைகளில் மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கம் அதிகமாக காணப்படும். அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என யாழ்.பிராந்திய காரியாலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யாழில்.நேற்றைய தினம் பெய்த மழையின் போது மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.