பூநகரி வாட்டியெடுக்கிறது வறட்சி 19 கிராம அலுவர் பிரிவில் 15 கிராம அலுவலர் பிரிவுகள் பாதிப்பு…
தற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. மக்கள் குடி நீர் உள்ளிட்ட நீர்த் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சிறியளவிலான நீர்த்தேக்கங்களில் நீர் வற்றியயதனால் கால்நடைகளும் குடிநீரின்றி அவதியுற்றுள்ளன.
அந்த வகையில் கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் உள்ள 19 கிராம அலுவர் பிரிவுகளில் 15 கிராம அலுவலர் பிரிவுகள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பூநகரி பிரதேச செயலர் கிருஸ்னேந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் பூநகரி பிரதேசத்தில் 1600 குடும்பங்களைச் சேர்ந்த 5500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மாவட்டச் செலயகம் ஊடாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு பூநகரி பிரதேச சபை தங்களுடைய வழமையான செயற்பாட்டில் குடிநீர் விநியோகித்தை மேற்கொண்டு வருகின்றனர் இது பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பகுதியின் தேவையினையே பூர்த்தி செய்கிறது. எனவும் தெரிவித்தார்.
மக்கள் தங்களுக்கு தேவையான குடி நீர் மற்றும் ஏனைய த் தேவைகளுக்கு நீரைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் காணப்படுகின்றனர். பூநகரி பிரதேச சபை வாரத்தில் இரண்டு தடவைகள் குடிநீரை விநியோகிக்கிறது. அதுவும் ஒரு குடும்பத்திற்கு 60 லீற்றர் வீதம் இதற்காக லீற்றர் ஒன்றுக்கு ஐம்பது சதம் பிரதேச சபைக்கு பொது மக்களால் வழங்கப்படுகிறது. இதேவேளை வசதியுள்ள பொது மக்கள் தனியாரிடம் இருந்து லீற்றர் ஒன்றுக்கு ஒரு ரூபா செலுத்தி தங்களது நீர்த் தேவையினை பூர்த்தி செய்து வருகின்றனர். பூநகரி பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.