இலங்கையில் இன்று காலை ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து நண்பகல் இரண்டு மணியளவில், தெகிவலையில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது. மேலும், தெமடகொட பகுதியில் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தெகிவலையில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு எதிரே உள்ள கட்டடம் ஒன்றில் இந்த குண்டு வெடித்துள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரியல் பூங்கா மூடப்பட்டது. மேலும், தெமடகொட பகுதியில் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மூவர் காயம் அடைந்து வைதஹ்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.
இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை இதில் குறைந்தது 185 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 471க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தபின் அங்கு நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாக இன்றைய தாக்குதல் கருதப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம்
Imran Khan
@ImranKhanPTI
Strongly condemn the horrific terrorist attack in Sri Lanka on Easter Sunday resulting in precious lives lost & hundreds injured. My profound condolences go to our Sri Lankan brethren. Pakistan stands in complete solidarity with Sri Lanka in their hour of grief.
இலங்கையில் நடந்த குண்டி வெடிப்பு சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோதி கடும் கண்டனம் தெரிவிப்பதாக ட்வீட் செய்துள்ளார். இலங்கை மக்களோடு இந்தியா துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் மோதி கண்டனம்
முப்படைகளின் தளபதிகளோடு பிரதமர் சந்திப்பு
இலங்கையில் நடந்த குண்டி வெடிப்பு சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோதி கடும் கண்டனம் தெரிவிப்பதாக ட்வீட் செய்துள்ளார். இலங்கை மக்களோடு இந்தியா துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் பிரார்த்தனைகள் ரத்து
தேவாலயங்களில் தாக்குதல் நடந்துள்ளதை தொடர்ந்து மாலை நடைபெறவிருந்த பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கொழும்பு பாதிரியார் அறிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனை நிலவரம்
கொழும்பு தேசிய மருத்துவமனையில் 45 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதில் ஒன்பது பேர் வெளிநாட்டவர்கள்.
நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்’
கொழும்புவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் நடந்த இடத்தில் பிபிசியின் சிங்கள சேவையின் செய்தியாளர் அசாம் அமீன் உள்ளார்.
அவர் கூறுகையில், “அமைதியாக இருந்த ஞாயிற்றுக்கிழமை காலை வேலையில், அனைவரும் ஈஸ்டர் திருநாள் பிரார்த்தனைகளில் இருந்தனர். திடீரென்று இந்த தாக்குதல் நடந்தது.
தேவாலயத்தில் உள்ள சில பாதிரியார்களிடம் நான் பேசிய போது, அவர்கள் மிகவும் அதிர்ச்சியில் இருந்தார்கள். புலனாய்வு போலீஸாரும் அதிர்ச்சியில் உள்ளனர். இது ஒரு தன்கு திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலாகும்.
தேவாலயத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் பேசியபோது, அவரும் அதிர்ச்சியில் இருந்தார். இதற்கு பின்னால் யார் இருக்கிறார் என்பதை தற்போது கூற முடியாது. 2009ஆம் ஆண்டுக்கு பிறகு, இவ்வாறான ஒரு சம்பவத்தை இலங்கை பார்த்ததில்லை. இலங்கை மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அனைத்து முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது “
இந்த சம்பவம் தொடர்பாக ட்வீட் செய்துள்ள இலங்கை நிதியமைச்சர் மங்கள சமரவீர, இது நாட்டில் குழப்பத்தை உண்டாக்க எடுக்கப்பட்ட முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இது போன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு பொது மருத்துவமனை, கொழும்பு கலுபோவில மருத்துவமனை, மட்டக்களப்பு மருத்துவமனை மற்றும் நீர் கொழும்பு ஆதார மருத்துவமனை ஆகிய இடங்களில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொழும்புவில் குறைந்தது 47 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அந்தப் பகுதியில் இருக்கும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீர்கொழும்புவில் கட்டுபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 50 பேர் வரை உயிரிழந்தக்கலாம் என்று அங்கிருக்கும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பில் இதுவரை 35 பேர் இறந்துள்ளனர். குண்டுவெடிப்பு நடந்தபோது சீயோன் தேவாலயத்தில் 33 பேர் உயிரிழந்தனர். பின்னர் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் இறந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒரு மோட்டார் சைக்களில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததால், அருகில் இருந்த பிற மோட்டார் சைக்கிள்களில் இருந்த பெட்ரோல் மூலம் பாதிப்பு அதிகமானதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்துள்ள பலரும் சிகிச்சைக்காக கொழும்பு மருத்துவமனை, மட்டக்களப்பு போதனா மருத்துவமனை, நீர்கொழும்பு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இலங்கையின் போலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு நட்சத்திர விடுதிகளில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவார்கள்.
குண்டுவெடிப்பு குறித்த விசாரணைக்கு அனைத்து பாதுகாப்புப் பிரிவு அமைப்புகளும் களமிறக்கப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பு தொடர்பாக பகிரப்படும் போலிச் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாதுகாப்பு குறித்த அவசரக் கூட்டம் கூட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளையும் நாளை மறுதினமும் இலங்கையில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்படும் என்று இலங்கை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவாசம் தெரிவித்துள்ளார்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவமானது, மனிதாபிமானமற்ற செயல் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பு கொச்சிகடை பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து, ஊடகங்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
காயமடைந்த பலரும் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலயங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடங்களில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதே போல குண்டு செயலிழக்கும் பிரிவினர் மற்றும் விசேஷ அதிரடிப்படையினர் உள்ளிட்ட சில பாதுகாப்பு பிரிவுகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
இதில் சில வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் கொழும்புவில் உள்ள இந்திய உயர் ஆணையருடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்வீட் செய்துள்ளார்.
கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வரும் பாதையில் சோதனைகளும் இடம்பெறும். அத்துடன் பார்வையாளர் பகுதி மூடப்பட்டுள்ளது. விமானப் பயணிகளை தவிர ஏனையவர்கள் வளாகத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Thanks – BBC