நாடு முகங்கொடுத்திருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலை வெற்றிகொள்வதற்கு அனைத்து பாதுகாப்பு தரப்பினரும் புதிய உத்வேகத்தோடு செயற்பட வேண்டுமென்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதற்கு தேவையான தலைமைத்துவத்தையும் வசதிகளையும் வழிகாட்டல்களையும் தான் வழங்குவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நேற்று (24) பிற்பகல் இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுடனான கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் அவசரகால நிலைமைகளுக்கு மத்தியில் கடந்த சில நாட்களாக காவல்துறை திணைக்களத்தினர் உயிரைப் பணயம் வைத்து மேற்கொண்டுவரும் பணியை பாராட்டிய ஜனாதிபதி நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பிற்காக பலமானதும் விரிவானதுமான நிகழ்ச்சித்திட்டமொன்றின் ஊடாக தொடர்ந்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கினார்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் எதிர்பாராத இந்த அவசரகால நிலைமைக்கு மத்தியில் நாட்டின் பாதுகாப்பு துறையும் பொதுமக்களும் புதியதோர் சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ள போதிலும், இலங்கை தேசத்தின் கடந்தகால அனுபவங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புகளுக்கு மத்தியில் அந்த சவாலை வெற்றிகொள்வது ஒருபோதும் கடினமானதல்ல என்றும் ஜனாதிபதி ; இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.
கடந்த நான்கு வருட காலப் பகுதியில் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்துடன் இந்த எதிர்பாராத நிலைமை பற்றி யார் எதைக் கூறினாலும் விமர்சனங்கள், கருத்துக்களை முன் வைத்தாலும் இந்த நிகழ்வுகள் பற்றிய உண்மையான தெளிவுடன் நேர்மையாகவும் நாடு பற்றிய உணர்வுடனும் செயற்படுவது அனைவரினதும் பொறுப்பாகுமென்றும் ஜனாதிபதி ; மேலும் தெரிவித்தார்.
சர்வதேச ரீதியாக நிறுவனமயப்பட்டுள்ள இந்த பயங்கரவாத இயக்கம் 30 வருடங்களாக நாம் முகங்கொடுத்த எல்ரீரீஈ. பயங்கரவாதத்தை பார்க்கிலும் வேறுபட்டதாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அதற்கு ஏற்ற உபாயங்களுடன் அதற்கு முகங்கொடுக்க முடியுமென்றும் தெரிவித்தார். உலகின் பல்வேறு நாடுகளுக்கு சவாலாக உள்ள இந்த பயங்கரவாத இயக்கத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் தற்போது உலகின் பலம்வாய்ந்த நாடுகள் ஈடுபட்டுள்ளதுடன், இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பிலும் அவர்கள் அனைவரினதும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதுடன், அப்பயங்கரவாத இயக்கத்தை இலங்கையிலிருந்து ஒழிப்பதற்கு தேவையான வழிகாட்டல் தொழிநுட்ப உதவி மற்றும் ஏனைய அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு அந்த நாடுகள் தற்போது முன்வந்திருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் போன்று பயங்கரவாதமும் இன்று உலகின் ஒரே வலையமைப்பாக உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்கு பாரியதோர் போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் உருவாகியிருக்கும் இந்த பயங்கரவாதமும் ஒரே அடிப்படையை கொண்டிருக்க வேண்டுமெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி ;, நாட்டின் முன்னுள்ள இந்த அனைத்து சவால்களையும் கூட்டாக வெற்றிகொள்ள இலங்கை தேசத்தின் பலம், அறிவு மற்றும் சர்வதேச உதவியையும் இச்சந்தர்ப்பத்தில் அதிகபட்சம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த துன்பியல் நிகழ்வினால் பலியான காவல்துறை அதிகாரிகள் மூவர் சார்பிலும் காவல்துறை திணைக்களத்தின் சகோதர அதிகாரிகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவத் தளபதி, காவல்துறை ;மா அதிபர், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
#president #Maithripala #eastersundaylk #police