சிவ பூமி அறக்கட்டளையின் அறப் பணிகளில் ஒன்றாக…
நன்றி உள்ளது நாய் என்கிறோம். ஒரு நேரமாவது உணவு இட்டால் அதை ஞாபகத்தில் வைத்து எப்போது கண்டாலும் தனது வாலை ஆட்டி நன்றி சொல்லும் இயல்பு நாய்களுக்குரியது. ஆனால் கோபம் வரும்போது “நாயே” என்று திட்டுகிறோம். ஏனெனில் மலத்தை உண்ணும் இயல்பும் நாய்களுக்குண்டு என்றபடியால் அவ்வாறு குறிப்பிடுகிறோம் என்று எண்ணுகிறேன்.
ஒரு தெரு நாயின் வாழ்க்கையைக் கூர்ந்து அவதானியுங்கள். “எப்படி ஆரோக்கியமாக வாழலாம்,” என்றதை அதனிடமிருந்துதான் கற்றுக் கொள்ள முடியும். எங்காவது தெருநாய்கள் இரவில் (மாலைக்குப் பின்) உணவு உண்ணுவதைப் பார்த்திருக்கிறீர்களா? வீட்டில் வளர்க்கும் நாய்கள் தான் மனிதர்களைப்போல இரவில் மட்டுமல்ல எந்தச் சாமத்திலும் உணவுண்ணும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறது. காரணம் நாய்களுக்குரிய இயல்புகளை மாற்றி அவற்றை நாம்தான் கெடுத்து வைத்திருக்கிறோம். நரகலைத் தின்றுவிட்டால் அறுகம்புல்லைத் தின்று வயிற்றிலுள்ள அசௌகரியத்தைப் போக்குவது நாய்களின் இயல்பு. வயிறாற உண்டபின் என்ன அமிர்தத்தைக் கொடுத்தாலும் நாய்கள் அவற்றை உண்ணமாட்டா. பயிற்சி கொடுத்து வளர்த்தோமானால் நல்ல சேவகனாக இருந்து தொழிற்படும் இயல்பும் நாய்களுக்குண்டு. மேலைத் தேய நாடுகளில் நாய்களுக்கெனப் பயிற்சிக் கல்லூரிகள் உண்டு.அங்கே அவர்கள் நாய்களைப் பெற்ற பிள்ளைகளைவிட அன்பாக வளர்க்கிறார்கள்.HMV இசைத்தட்டுகளின் வியாபார இலட்சினையில் நாய்க்கு முக்கிய இடம் உண்டு.அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதையும் உண்டு.
ஆனால் இங்கே நாம் என்ன செய்கிறோம். நாய் குட்டி போட்டால் அது ஆணா? அல்லது பெண்ணா ? என்று தூக்கிப் பார்த்துவிட்டு, பெண்ணானால் அவைகள் கண்களைத் திறந்து உலகத்தைப் பார்க்குமுன்னர் அவற்றை எடுத்துச் சென்று தெருக்கரை ஓரங்களிலும், பற்றை மறைவுகளிலும் கொண்டு சென்று விட்டுவிடுகிறோம். அப்படி விடப்படும் நாய்குட்டிகளை வேறு நாய்கள் அடித்துக் கொல்லும். இல்லாவிடில் அவை தெருவில் வாகனச் சில்லுகளின் அடியில் பட்டு மரணித்துவிடும். இல்லாவிடில் காகத்துக்கு அல்லது பருந்துக்கு இரையாகிவிடும்.
தெரு நாய்கள் அல்லது கட்டாக்காலி நாய்கள் ஒரு பாரிய பிரச்சினையாகவே இருந்து வந்திருக்கிறது. தெரு நாய்களை ஒழிக்கவெனப் பலதிட்டங்கள் முன்பிருந்தன. உள்ளூராட்சி மன்றங்கள் நாய்பிடிப்பதற்கென விசேட வாகனங்களை வைத்திருந்தனர். நாய்பிடிப்பதில் கை தேர்ந்தவர்களை விட்டு அவற்றைப் பிடித்து வாலை அறுத்து விட்டு அவைகளைக் கொண்டு சென்று கடலில் மூழ்கடித்துவிடுவது. இல்லாவிடில் நச்சுவாயுவை அடித்துக் கொன்றுவிடுவது அல்லது அவைகளைத் தலையிலடித்துக் கொல்லுவது எனப் பல வழிகள் நாயை ஒழிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் கடந்த அரசு அதிகாரத்தில் இருந்தபோது ஜனாதிபதி மஹிந்தா ராஜபக்ஸ நாய்களைப் பிடித்துக் கொல்வதுக்கு எதிராக நாடாளு மன்றத்தில் சட்டமொன்றை அமுலாக்கினார். அதன்படி மீண்டும் நாய்களின் பெருக்கம் அதிகமாகின. அண்மையில் கொண்டு வரப்பட்ட புதிய வரவு செலவுத் திட்டத்தில் நாய்களுக்குக் கருத்தடை செய்யவென ஒரு தொகை பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் நாய்கள் பிடிக்கப்பட்டுக் கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் தெருவில் விடப்படும். இவ்வாறான தெரு நாய்களால் பல வாகன விபத்துகள் இடம்பெறுகின்றன. அவைகளின் மலத்தால் தெருக்கள் அழுக்காகின்றன. நோய்கள் பரப்பப்படுகின்றன. நாய்கள் இனச்சேர்க்கைக்காகக் கூடுகின்ற பருவகாலங்களில் இரவு பகலென்று இல்லாமல தொல்லைகளைக் கொடுக்கின்றன. நாய்கடியால் மரணங்களும் சம்பவிக்கின்றன.
இவ்வாறானா தெருநாய்களுக்குரியதொரு மேம்பாட்டுத் திட்டத்தை பற்றிச் சிந்தித்து சிவபூமி அறக்கட்டளையினர் செயற்பட்டதன் விளைவு கடந்த 12.04.2019 அன்று வட மாகாணத்திற்குட்பட்ட பளைப் பகுதியிலுள்ள இயக்கச்சி என்ற கிராமத்தில் நாய்களுக்கென ஒரு சரணாலாயம் அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த மானிப்பாய் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.பேராயவரின் மூத்த மகளான செல்வி.ரோகினி பேராயவரே அதற்கான நிலத்தைக் கொடுத்துதவியிருக்கிறார். மேற்படி சரணாலயத்தைத் திறந்து வைத்தபின் சிவபூமி அறக்கட்டளையின் மூலவர் ஆறு திருமுருகனைச் சந்தித்து அந்த நாய்கள் சரணாலயத்தைப் பற்றிக் கேட்டோம்.
“ அந்தச் சரணாலயத்தை ஆரம்பிப்பதற்கு அடிப்படையாக அமைந்ததொரு முக்கிய விடயம் என்ன வெனில் யாழ்ப்பாணச் சித்தர் என ழைக்கப்படும் தவத்திரு யோகர் சுவாமிகளின் 50வது குருபூசை வெகு விமர்சிகையாக நடைபெற்றது. அச் சமயம் இந்து மாமன்றம் இந்து ஒளியின் சிறப்பு மலராக யோகர் சுவாமி பற்றிய செய்திகளை வெளிக் கொண்டு வந்தது. அதன் தொகுப்பாசிரியராக நான் இருந்தபடியால் யோகர் சுவாமி பற்றிய விபரங்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். அதன்படி யோகர் சுவாமி பற்றிய பலரின் குறிப்புப்படி யோகர் சுவாமிகள் நாய்கள் மீது அளப்பரிய அன்பும் அக்கறையும் வைத்திருந்ததாகக் குறிப்புகள் காணப்பட்டன.முக்கியமாக நாய்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் எனவும் பொதுவாக உயிர்களை நேசிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.பெட்டை நாய்களைக் கொண்டு வந்து தெருவில் விடும் வழக்கத்தைப் பல தலைமுறையாகக் கொண்டிருக்கின்ற தமிழ் சமுதாயத்தை அவ்வகையான கர்மங்கள் பாதிக்கும் எனவும் அவர் எச்சரித்திருந்தார். தங்களையும் ஒரு பெண் தான் பெற்றவள் என்ற அடிப்படை உணர்வில்லாமல் செயற்பட்டுக் கொண்டு வருகிறார்கள்.பால் குடி மறக்க முன்பே ஒரு குழந்தையைக் கொண்டு சென்று தெருவில் விடுவதைப்போல… நாய்க்குட்டிகளை விட்டு அவை வாகனங்களின் சில்லுக்குள் அகப்பட்டுச் சின்னாபட்டு இறந்து கிடக்க… காகங்கள் அவற்றைக் கொத்திக் கிளறிவிட….. அதனைக் கண்டும் காணாதவர்களாக மனித குலம் அவற்றைக் கடந்து போக… என இப்படிப் படிக்காதவர்கள் தொட்டுப் படித்தவர்கள் வரை செய்கின்ற அந்த மனித நேயமற்ற விடயத்தைச் சுட்டிக்காட்டி சுவாமிகள் திட்டியதாகப் பல குறிப்புகள் உண்டு.
கோகர் சுவாமிகளின் கூற்றுப்படி கருணையற்ற சமூகத்தை வளர்ப்பது பிழையான காரியம்.தினமும் “வான் முகில் வழாது பெய்க” என்று கந்த புராணத்தை ஓதுகிறோம். அதிலேதானே “குறைவிலாது உயிர்கள் வாழ்க” என்ற வரிகளும் வருகின்றது.ஆனால் இப்படிப் பாடிவிட்டுப் பிற உயிர்களை வருத்துகின்ற பண்பாட்டையும் நாம் கொண்டிருக்கிறோம்.குறைவிலாது உயிர்கள் வாழ்ந்தால்தானே இயற்கை சமநிலை பேணப்படும். அது நலம்பெறும். அது வளம் பெறும்.
தற்போதைய சூழ்நிலையில் தெருவில் காணப்படும் நாய்களைக் காணுந்தோறும் எனக்கு யோகர் சுவாமிகளின் சிந்தனை ஞாபகத்தில் வரும்.நாய்களுக்குரிய விமோசனத்தைத் தரவல்ல எந்தவொரு காரியத்தையும் அரச திணைக்களங்களோ, மாகாண சபையோ அல்லது இது தொடர்பான பிற நிறுவனங்களோ செய்யப்போவது கிடையாது.ஆனால் தென்னிலங்கையில் நாய்களுக்குரிய சரணாலயங்களைச் சில பெண்களும் பௌத்த பிக்குகளும் அமைத்து நாய்கள் தெருக்களில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுகின்றனர்.இந்தியாவிலும் பல சரணாலயங்கள் நாய்களுக்கென அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
நாய்களுக்கு எம்மண்ணில் இழைக்கப்படும் கொடுமைகளைப் பார்த்துவிட்டுத்தான் இந்தச் சரணாலயத்தை ஆரம்பித்துள்ளேன். நன்கொடையாகக் கிடைத்த அந்தக் காணி பல காலம் பராமரிப்பற்றுக் கிடந்ததால் காடு பற்றிப் போய்க் காணப்பட்டது. அதில் ஆறு ஏக்கர் நிலத்தைப் பெரும் பொருட் செலவில் நாய்கள் சுதந்திரமாகச் சீவிக்கக் கூடிய முறையில் வடிவமைத்திருக்கிறோம்.நிலத்தைச் சுற்றிப் பாதுகாப்பான வேலிகள் உண்டு. மழை வெயிலுக்கு ஓதுங்கவென இரண்டு பெரிய கொட்டைகளைப் போட்டிருக்கிறோம்.குட்டிகளைப் பராமரிக்கவெனக் கூடுகளை அமைத்திருக்கிறோம். சரணாலயத்தைப் பராமரிக்க வென மூன்று பணியாளர்களை நியமித்திருக்கிறோம். அதற்கென ஒரு நிர்வாக அலுவலகமொன்றும் இயங்குகிறது.சமையல் செய்யவென ஒரு மண்டபம் உண்டு.சைவ உணவுகள்தான் அவற்றிற்குப் பரிமாறப்படுகிறது.மிருக வைத்தியர் உதவியோடு தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறது. மிருக வைத்தியத் திணைக்களத்தினர் உதவுகிறார்கள்.உள்ளூராட்சித் தணைக்களத்தின் உதவியைக் கேட்டிருக்கிறோம். அவர்கள்தான் தற்போது 45 நாய்களைத் தந்திருக்கிறார்கள். வட மாகாண ஆளுநரும் அதற்குரிய மின்சார வசதிகளைச் செய்து தந்திருக்கிறார். – என்று சொல்கிறார் ஆறு திருமுருகன்.
இது தொடர்பாக வரக் கூடிய அரச நிறுவனங்கள் அதாவது பொதுச் சுகாதார உத்தியோகத்தோர் போன்றோரின் பிரச்சினைகளை எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்? சரணாலயத்தை நிருவகிக்கத்தேவையான நிதியை எப்படிப் பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள்? என்று அவரிடம் கேட்டோம்.
சரணாலயத்தில் நீங்கள் அதைச் செய்யவேண்டும் இதைச் செய்யவில்லை என்ற குற்றப் பத்திரிகையோடு வருவதைத் தவிர்த்து அவர்களும் இந்தச் சமூகப் பணியின் பங்காளிகளாக வருவதே பொருத்தமானதாக இருக்கும் என்று எண்ணுகிறேன். சரணாலயத்தை மேம்படுத்துவதால் நன்மை அடையப் போவது சிவபூமி அல்ல. எமது சமூகம். எனவே அப்படிப்பட்ட தலையீடுகள் எமக்கு அசௌகரியத்தைக் கொடுத்தால் இந்தச் சரணாலயத்தை சுகாதாரத் திணைக்களத்திடமோ அல்லது அது அமைந்துள்ள உள்ளூராட்சிச் சபையிடமோ கொடுத்துவிட்டு நாம் ஒதுங்கிவிடுவோம். அடுத்தது எமக்கு ஏற்படப்போகும் நிர்வாகத்துக்குரிய நிதி தொடர்பானது. தற்போது 74 இலட்சம்வரை செலவாயிற்று. எமது சமூகம் சார்ந்த சிந்தனையாளர்களினால், சமூக அக்கறை கொண்டவர்களினால் முதியோர் இல்லங்களுக்கும், சிறுவர் பாராமரிப்பு இல்லங்களுக்கும் மற்றும் பிற தொண்டு ஸ்தாபனங்களுக்கும் கொடுக்கப்படுகின்ற நன்கொடைபோல எமக்கும் தந்துவலாம். அப்படி வருகின்றவைகளைச் சிவபூமி அறக்கட்டளை ஏற்றுக் கொள்ளும். என்று முடித்திருக்கிறார் ஆறு திருமுருகன்.
இதை ஒரு புண்ணியமான காரியமாக எண்ணி எல்லோரும் செயற்பட வேண்டும். குறைவிலாது உயிர்கள் வாழ்ந்தால் நாடு நலம்பெறும்.ஒரு சமூகம் ஆரோக்கியமானதா, இல்லையா? என்று பார்ப்பதற்கு அந்தச் சமூகத்திலே ஊடாடித்திரிகின்ற ஜீவராசிகள் எப்படி இருக்கின்றன? என்று ஆராய்வர்களாம். இப்படிப்பட்ட பொதுப் பணிகளால் “வான்முகில் வழாது பெய்து ” உலகம் மேன்மை கொள்ளட்டும்.