இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 2017 ஆம் வருட பட்ஜட்டில்; வடமாகாணத்தில்; சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு ரூபா 1000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளை கிழக்கு மாகாணத்திலும் தென்பகுதியிலும் சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு தலா ரூ 1000 மில்லியன் அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறுவர் வைத்தியசாலையானது மாகாணத்திலுள்ள போதனா வைத்தியசாலையுடன் இணைந்ததாகவே அமைக்கப்பட இருப்பதால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அண்மையாக இவ் வைத்தியசாலை அமையும். இதற்காக போதனா வைத்தியசாலை சுற்றாடலில் அண்ணளவாக 1.5 ஏக்கர் பரப்பளவான காணி தேவையாக உள்ளது. இதனை தந்துவ வேண்டுமென வைத்தியசாலை தரப்புகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
போதனா வைத்தியசாலை சுற்றாடலில், நகரில், வடபகுதி அனைத்துப் பகுதிமக்களும்; இலகுவில் போக்குவரத்து செய்யக் கூடிய மத்திய பகுதியில் காணி உள்ளவர்கள், நன்கொடையாளர்கள் சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு காணி தந்துதவ வேண்டும்.
இன்னும் சில மாதங்களில் இப்பணிக்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்படாத விடத்து இந்நிதியானது வேறுபகுதிக்கு திருப்பப்படும் சாத்தியமுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு இந்நிதி வடபகுதிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு இல்லை. தற்போது காலியில் சிறுவர் வைத்தியசாலை அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கையில் தற்போது கொழும்பிலும் கண்டியிலும் மாத்திரமே சிறுவர்களுக்கான நவீன வசதிகளைக் கொண்ட வைத்தியசாலை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.