சாதிப் பெருமையைக் காப்போம் என்று வன்முறை புரியலாம்
மொழியைக் காப்போம் என்று வன்முறை புரியலாம்
இன மானத்தைக் காப்போம் என்று வன்முறை புரியலாம்
மதங்களைக் காப்போம் என்று வன்முறை புரியலாம்
அகிம்சையைக் காப்போம் என்றால் என்ன செய்யலாம்?
கமலா வாசுகி 23.04.2019
உனக்குத் தேவையான அடையாளங்களை
என் மீது போர்த்து
தாவணியாய், சேலையாய்
முக்காடாய் முழு நீளமாய்
வியாபாரத்துக்குத் தேவையெனில்
முழு நிர்வாணமாயும்,
எனது ஆடை
உன்னால் என்மீது விதிக்கப்படும்
அதிகாரத்தின் குறியீடு
நானோ
வெயிலிலும் குளிரிலும்
துயரிலும் மகிழ்விலும்
இதமாய் உடனிருக்கும்
போர்வையைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.
மகனே உன் பார்வையிலிருந்து
என்னுடலை மறைப்பதற்காக அல்ல
என் மனம் அவாவும் விடுதலையின் குறியீடாக!
கமலா வாசுகி 29.04.2019
பூட்டி வையுங்கள் – போதாதெனில்
அடையாளப் போர்வைகளை
எம்மீது சாத்துங்கள்
வர்ணங்களையும் நீங்களே சொல்லுங்கள்
குறுக்குங்கள் நீட்டுங்கள்
போதை கொள்வதற்காய்க் குறுக்குங்கள்
பொறாமை கொண்டு நீட்டுங்கள்
பின்னர்;
சதுரங்கப் பந்தயத்தில்
எங்கள் துகில்களை உரியுங்கள்
நானோ
உங்கள் சந்தேக அழுக்கை
வன்முறையின் கறைகளைக்
கழுவும் திராவகத்தைத்
தேடிக் கொண்டிருக்கின்றேன்
என் பெறா மகன்களே!
அந்த கேடுகெட்ட கூறுகள்
உங்கள்
பரம்பரையலகுகளில் இருந்து
நீக்கப்படும் கூர்ப்பிற்காய்
காத்திருக்கின்றேன்
கமலா வாசுகி 29.04.2019