தமிழகத்தில் வரும் மே 19ஆம் திகதி நான்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அன்றைய தினம் 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி நடைபெற்ற இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலின் முடிவுகள் மே 23ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் நேற்றையதினம் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சா{ஹ தேனி, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள 15 மக்களவைத் தொகுதிகளில் 46 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையகத்துக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் வரும் மே 19ஆம் திகதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது அதிகபட்சமாக தருமபுரியில் எட்டு வாக்குச்சாவடிகளிலும், தேனியில் இரண்டு வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.