உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு, துருக்கியில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. துருக்கியின் பட்டிதுல்லா எனப்படும் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய 50 பேர் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க அண்மையில் தெரிவித்துள்ள நிலையில், குறித்தக் குழுவினர் தொடர்பில், எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகியிருக்கவில்லை.
இந்தநிலையில் அவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய, பயங்கரவாதக் குழுவுக்கு சூதாட்டம் ஊடாக நிதி கிடைத்திருக்குமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் குறித்தும் இலங்கைக்கு வருகைத் தரும் சூதாட்டக்காரர்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை கொழும்பிலுள்ள சூதாட்ட மத்திய நிலையம் ஒன்றில் தங்கியிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவரின் கைத்தொலைபேசியில் சந்தேகத்துக்கிடமான சில புகைப்படங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபடும் சில இலங்கையர்கள் தொடர்பிலும் சூதாட்டத்துக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#உயிர்த்த ஞாயிறு #தாக்குதலாளிகளுக்கு #துருக்கி #பயிற்சி #சூதாட்டம் #நிதி #eastersundaylk