வரணி சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் சாதிப் பாகுபாடு காரணமாக ஆலயத் திருவிழாவை நிறுத்தியவர்களுக்கு எதிராக ஊர் மக்களுடன் இணைந்து நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கு அகில இலங்கை சைவ மகா சபை தீர்மானித்துள்ளது.
மேற்படி ஆலய நிர்வாகத்தை தம்வசம் வைத்திருக்கின்ற சிலர் அப்பகுதியில் உள்ள மக்களை சாதீய ரீதியில் வேறுபடுத்திப் பார்க்கின்றனர் என கடந்த காலங்களில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. அதன் ஒரு கட்டமாக கடந்த வருடம் (2018) வருடாந்த திருவிழாவின் போது ஒரு சமூகத்தினர் வடம் பிடித்து தேர் இழுக்கக்கூடாது என்பதற்காக ஜே.சி.பி கனரக இயந்திரத்தின் மூலம் தேர் இழுந்து அனைத்துலக சைவத் தமிழ் மக்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தினர்.
எனினும், ஆலய வீதியில் புதிதாக மணல் கொட்டப்பட்டதால் தேர் இழுப்பதில் உள்ள சிரமங்களைக் காரணம் காட்டியே கனரக வாகனத்தின் மூலம் தேர் இழுக்கப்பட்டது என அப்போது ஆலய நிர்வாகத்தினரால் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த விடயம் பெரும் பூதாகரமானதைத் தொடர்ந்து அகில இலங்கை சைவ மகா சபையின் அங்கத்தவர்கள் நேரடியாக அங்கு சென்று பல தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொண்டனர். அடுத்த ஆண்டுகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என அப்போது கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வருடம் (2019) வருடாந்த திருவிழாவுக்கான ஏற்பாட்டுக் கூட்டம் நடைபெற்றபோது 7 ஆம் திருவிழா உபயகாரர்களான குறித்த சமூகத்தினர் தேர் வடம் பிடித்து இழுக்கக்கூடாது எனக் கூறப்பட்டது. இதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்தனர்.
இவ்விடயம் தென்மராட்சிப் பிரதேச செயலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் எந்தவித வேறுபாடுகளும் இன்றி திருவிழாவை நடத்துமாறு ஆலய நிர்வாகத்தினரை பிரதேச செயலாளர் அறிவுறுத்தினார் எனக் கூறப்படுகின்றது.
எனினும், ஆலய நிர்வாகத்தினர் திடீரென திருவிழாவை நிறுத்தியிருக்கின்றனர். கடந்த 20 ஆம் திகதி திருவிழா ஆரம்பமாகவிருந்த நிலையில், அது திடீரென நிறுத்தப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். சாதிப் பாகுபாடு இன்றி திருவிழாவை நடத்த அனுமதிக்குமாறு கோரி இப்போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், சாதியப் பாகுபாடு காட்டுவதன் மூலம் எந்தவொரு சமூகத்தையும் ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கருதிய சைவ மகா சபை குறித்த ஆலய நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு தீர்மானித்துள்ளது.
சைவ மகா சபையின் அங்கத்தவர்கள் கூடி இந்த விடயம் குறித்து ஆராய்ந்ததன் அடிப்படையில், வழிபடுவோரின் உரிமையை மறுத்த ஆலய நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு எதிராக பாகுபாடுகளுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகளின் கீழ் வழக்கைத் தாக்கல் செய்வது எனத் தீர்மானித்துள்ளனர்.
#வரணிசிமிழ்கண்ணகைஅம்மன்ஆலயம் #சாதிப்பாகுபாடு