நாடு முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 23) காலை 8 மணிக்குத் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது. அடுத்து யார் ஆட்சியமைப்பது என்பதற்கான விடை இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும் என்ற நிலையில், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் உற்சாகமாக காணப்படுகின்றன.
தமிழகம், புதுச்சேரியிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 21 தொகுதிகளில் முன்னிலையில் இருந்துவருகிறது. அதிமுக கூட்டணி 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலையில் இருந்துவருகிறார். அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன், மத்திய சென்னையில் தயாநிதி மாறன், வடசென்னையில் கலாநிதி, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு, கடலூரில் ரமேஷ், திண்டுக்கல் வேலுச்சாமி, கள்ளக்குறிச்சியில் கவுதமசிகாமணி, காஞ்சிபுரம் வேட்பாளர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் இருந்துவருகிறார்கள். இதுபோலவே நீலகிரி தொகுதியில் ஆ.ராசா, பொள்ளாச்சி தொகுதியில் சண்முக சுந்தரம், சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன், தென்காசி தனுஷ் எம்.குமார், தஞ்சாவூர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தூத்துக்குடி கனிமொழி, திருநெல்வேலி தொகுதியில் ஞானதிரவியம், திருவண்ணாமலை அண்ணாதுரை உள்ளிட்ட திமுக வேட்பாளர்களும் முன்னிலையில் இருந்துவருகிறார்கள்.
ஆரணியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், திருச்சி தொகுதியில் திருநாவுக்கரசர் ஆகியோர் முன்னிலையில் இருந்துவருகிறார்கள். நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் சின்ராஜ் முன்னிலையில் இருக்கிறார்.
அதிமுக கூட்டணி 2 இடங்களில் முன்னிலை
கோவை பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்துவருகிறார். திருப்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் இருந்து வருகிறார்.
இதேவேளை
ஆரம்பத்தில் இருந்தே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தில் பின்தொடர்ந்தது. காலை 8.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 150 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 58 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன. மற்ற கட்சிகள் 23 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ரேபரேலியில் சோனியா காந்தியும் முன்னிலை பெற்றனர். வாரணாசியில் பிரதமர் மோடி முன்னிலை பெற்றார். இதேபோல் நட்சத்திர வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் ஆரம்பம் முதலே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றனர்.