இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மதுரையில் சு.வெங்கடேசன், தென்சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், விழுப்புரத்தில் ரவிக்குமார், கரூரில் ஜோதிமணி என நான்கு எழுத்தாளர்களும் முன்னிலையில் இருப்பதனால் இவர்கள் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் நான்கு எழுத்தாளர்கள் போட்டியிட்டனர். சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக மதுரையிலும், எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தி.மு.க வேட்பாளராக தென்சென்னையிலும், எழுத்தாளர் ரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக விழுப்புரத்திலும், எழுத்தாளர் ஜோதிமணி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கரூரிலும் போட்டியிட்டனர்.
மதுரையில் அ.தி.மு.க வேட்பாளர் ராஜ்சத்யனுக்கும் சு.வெங்கடேசனுக்கும் நேரடியான போட்டி நிலவியது. ராஜ்சத்யன், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினரான ராஜன் செல்லப்பாவின் மகன் ஆவார். கரூரில் மக்களவைத் துணை சபாநாயகரான அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரைக்கும் ஜோதிமணிக்கும் நேரடியான போட்டி நிலவியது. தென்சென்னையில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுமான அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தனுக்கும் தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் இடையே நேரடியான போட்டி நிலவியது. விழுப்புரத்தில் பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணனுக்கும் ரவிக்குமாருக்கும் இடையில் நேரடி போட்டி காணப்பட்டது.
தற்போது வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நான்கு எழுத்தாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகவுள்ளனர்.
#நாடாளுமன்றம் #தமிழக #எழுத்தாளர்கள் #திராவிட முன்னேற்றக்கழகம்