Home இலங்கைஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..

ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..

by admin


அரசியலமைப்பில் அரச தலைவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி வண. ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட்டை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.  தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தை அலட்சியம் செய்த குற்றத்திற்காக மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் அவர் சிறையிலிடப்பட்டார். கற்றறிந்த நீதவான் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்ததை அடுத்து, வண. ஞானசார தேரருக்கு தன்னை நியாயப்படுத்துவதற்கான அனைத்து சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்ட விசாரணை ஒன்றின் பின்பே இந்தத் தண்டனையும் தீர்ப்பும் நிறைவேறியது.

உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முறையீட்டு மனுவும் பின்னர் நிராகரிக்கப்பட்டது. இந்நாட்டின் பௌத்தர் அல்லாத குடிமக்கள் மீதான வன்முறையை தூண்டிவிடும் இத்தேரரின் நடவடிக்கைகள் மீது ஒரு போதும் சட்ட அமுலாக்க நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுத்திராத நிலையில், இச்சந்தர்ப்பம் ஒன்றிலேயே அவர் சட்டதிற்குட்படுத்தப்பட்டு கையாளப்பட்டார்.

எல்லாக் குடிமக்களும் சமமாக நடத்தப்படும் ஓர் நாடாக நாம் முன்னேறிச் செல்வதற்கு இலங்கை தற்போது எதிர்கொள்ளும் சவால் இனவெறி மற்றும் மதவெறியை கட்டுப்படுத்தி வைப்பதாகும். அரசாங்கமானது இச்சவாலை கருத்திற்கொண்டு எந்த இனத்தவர் மதத்தவராய் இருப்பினும், எல்லா கடும்போக்காளர்களையும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். எல்லா கடும்போக்கான சிந்தனையாளர்களையும் சமமான அளவில் நடாத்த வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கும் இந்நிலையில் பௌத்த தேரர் ஒருவர் மீதான ஜனாதிபதியின் அதி மென் போக்கானது நாட்டிற்கு தவறான செய்தியை அறிவிப்பதாக உள்ளது.

அச்செய்தி யாதெனில், எண்ணிக்கையில் குறைவானவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடுவது ஏற்றுக்கொள்ளப் படகூடியது, ஆனால் எண்ணிக்கையில் அதிகமானவர்களுக்கு அசௌகரியம் அளிக்கும் தீங்கற்ற செயல்கள் மிக கடுமையாக நோக்கப்படும் என்பதாகும். இது பெரும்பான்மைவாதத்தினை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக் கூடியதாகும்.

ஜனாதிபதியின் இந்நடவடிக்கையை கண்டனம் செய்து இவ் ஆபத்தான வழக்கத்தை எதிர்மாறாக மாற்றுவதற்கு நேர்வழி சிந்தனையாளர்கள் அனைவருக்கும் நாம் அழைப்பு விடுகின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #சுமந்திரன் #ஞானசாரதேரர் #தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு #TNA

Spread the love
 
 
      

Related News

1 comment

Siva May 24, 2019 - 11:17 am

இது போன்ற எந்தவிதமான தில்லாலங்கடி வேலைகளை செய்தாலும், இன்னுமொரு முறை
தேர்தல் வெற்றியொன்றை இவரால் என்றைக்கும் பெற முடியாது.

ஞானசாரதேரர் போன்ற இன- மத வெறியர் ஒருவரை இந்நாட்டின் முதற் குடிமகனான ஜனாதிபதி சிறைக்குச் சென்று சந்தித்ததே மிகப் பெரும் தவறு, என்றால் அது மிககையில்லை.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More