பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு விடுதலை வழங்கியதைப் போன்று அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் ஜனாதிபதி ஆவண செய்ய வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
ஹட்டனில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஞானசார தேரரின் விடுதலை தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டது. இதன்போது ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட வேண்டும் என பெரும்பான்மை மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கமைய பொது மன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அவருடைய விடுதலை சரியா பிழையா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க தமிழ் அரசியல் கைதிகளும் இதேபோல பொது மன்னிப்பின் கீழ் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும்.
மனிதாபிமான ரீதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய ஜனாதிபதி ஆவண செய்ய வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.