காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பதவி விலகும் முடிவு தற்கொலைக்கு சமம் என்று லாலுபிரசாத் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலுபிரசாத் யாதவ் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் ராஞ்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் தேர்தல் தோல்விக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவிவிலக முடிவெடுத்து இருப்பது குறித்து தனது ருவிட்டர் பக்கத்திலேயே லாலுபிரசாத் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை விலக முடிவெடுத்து இருப்பது அவரது கட்சிக்கு மட்டுமல்ல, சங்பரிவாருக்கு எதிரான அனைத்து கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தற்கொலை முடிவுக்கு சமம். நேரு குடும்பத்தை தவிர வேறு யாராவது ஒருவர் கட்சிக்கு தலைவராக நியமிக்கப்பட்டால் அவரை ராகுல்காந்தி, சோனியா காந்தியின் ரிமோட் மூலம் இயங்கும் பொம்மையாக நரேந்திர மோடி, அமித்ஷா படை சித்தரிக்கும்.
ராகுல் காந்தி ஏன் தனது அரசியல் எதிரிகளுக்கு அப்படி ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என லாலுபிரசாத் யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார்.
#ராகுல் காந்தி #லாலுபிரசாத் யாதவ் # பதவி விலகும்