அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையிலே பொய்யான ஆவணங்களைத் தயாரித்து, பொய்ச் சாட்சியமளித்தார் என்னும் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த, சிரேஸ்ட அரச சட்டத்தரணி லக்மினி ஹிரிஹாகம இது தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையிலேயே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அமைச்சர் ரவி கருணாநாயக்க, அவருடைய மகள் ஒனெலா கருணாநாயக்க மற்றும் இன்னும் சிலரிடம் வாக்குமூலங்களைப் பதிவுச் செய்துகொண்டு இவ்வாறு ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாக சிரேஸ்ட அரச சட்டத்தரணி, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்
ரவி கருணாநாயக்கவின் குடும்ப உறுப்பினருக்குரிய க்ளோபல் ட்ரான்ஸ்பொட்டேஷன் நிறுவனத்துக்கு உரிய வங்கி கணக்குகள், வருமானம் உள்ளிட்ட விவரங்களை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு, பெப்ரவரி 28ஆம் திகதியன்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதும் அவற்றினை இதுவரை வழங்காமையால், விசாரணைகள் யாவும் முழுமையாக முடங்கியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரவி கருணாநாயக்க மற்றும் அவருடைய மகள் ஒனெலா கருணாநாயக்க ஆகிய இருவரையும் ஜூன் 6 ஆம் திகதியன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
#ரவி கருணாநாயக்க #வழக்கு #மத்திய வங்கி #பிணைமுறி மோசடி