இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ரவிசந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானத்தின் தற்போதைய நிலை என்ன என தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
குறித்த 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற நிலையில் தண்டனை காலத்துக்கு மேல் இவர்கள் சிறையில் இருப்பதால் அவர்களை விடுவிடுக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர்களது விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்ததனையடுத்து அவர்களது விடுதலை தொடர்பான சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அனுப்பப்பட்டது.
அந்த தீர்மானம் அனுப்பு ஓராண்டாகியும் இன்னும் அதன் மேல் எந்த நடவடிக்கையையும் ஆளுநர் எடுக்காத நிலையில் ஏழு பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி 2012-ஆம் ஆண்டு ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதன்போது ஏழு பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவைத் தீர்மானம் ஆளுனரிடம் நிலுவையில் உள்ளதாகவும், தீர்மானத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க 2 வார அவகாசம் தேவை எனவும் தமிழக அரசு தரப்பில் கோரப்பட்டதனை ஏற்று விசாரணையை நீதிபதிகள் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். #ராஜீவ் காந்தி #உயர்நீதிமன்றம் #ராஜீவ்காந்திகொலைவழக்கு