Home இலங்கை இன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர விட்டுக் கொடுப்புகள் மூலமே ஏற்படும்-

இன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர விட்டுக் கொடுப்புகள் மூலமே ஏற்படும்-

by admin

த.சித்தார்த்தன்

#தர்மலிங்கம்சித்தார்த்தன் #தமிழ்மக்கள்# முஸ்லிம்மக்கள் #ரிசாட்பதியுதீன்

தமிழ் – முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக் கொடுப்பு மூலமே ஏற்படுமென பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளதுடன், இரு சமூகங்களுக்கும் இடையிலான சரியான புரிந்துணர்வே சிறுபான்மையினங்களின் பாதுகாப்புக்கு அடிப்படையான விடயமெனவும் தெரிவித்தார். அத்துடன் நாட்டின் ஜனாதிபதியாக எவர் வந்தாலும் ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் எழுத்து மூலமோ அல்லது மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஊடான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டாலும் அவை நிறைவேற்றப்படாது என்பது வரலாறு என குறிப்பிட்ட அவர் எதிர்வரும் தேர்தலில் ஓரளவு நியாயமாக, சொன்னதை நிறைவேற்றக்கூடியவர் என கருதப்படக்கூடிய வேட்பாளர் யார் என ஆராய்ந்து கூட்டமைப்பு ஆதரவளிப்பது குறித்து முடிவு எடுக்குமெனவும் குறிப்பிட்டார்.

கேள்வி : தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகியமை குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?

பதில் : முஸ்லிம் அமைச்சர்கள் ஒட்டு மொத்தமாக பதவி விலகியமை பேரினவாதிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அது மாத்திரமல்ல பேரினவாதிகளுக்கு பின்னாலுள்ள அரசியல் சக்திகள் ஏப்ரல் 21இற்கு பின்னர் தேசிய நலனிலோ அல்லது பாதுகாப்பை முதன்மைப்படுத்துவதிலோ அக்கறை காட்டாது நிகழ்ந்த துரதிஷ்ட நிகழ்வை பயன்படுத்தி அடுத்து வரக்கூடிய தேர்தலை நோக்கிய நகர்வுகளை மேற்கொள்வதையும் காணமுடிகின்றது.

அதாவது ஒரு முஸ்லிம் – சிங்கள கலவரத்தை உருவாக்குவதன் மூலம் ஒரு குழப்பத்தை உருவாக்கி அந்த குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க எடுக்கப்பட்ட முயற்சியை முஸ்லிம் தலைமைகள் ஒற்றுமையாக முறியடித்துள்ளனர்.

கேள்வி : முஸ்லிம் அமைச்சர்கள் இராஜிநாமா செய்த பின்னரும் கூட ரிசாத்தை கைது செய்யுமாறு காலியில் போராட்டம் நடத்தப்பட்டமை குறித்து என்ன கூறுகின்றீர்கள்?

பதில் : இந்த போராட்டங்கள் அனைத்துமே அரசியல் நோக்கம் கொண்டதாக பார்க்கக் கூடியதாகவுள்ளது. முன்னாள் அமைச்சரி ரிசாத் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்தாரா அந்த தொடர்புகள் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு உதவும் வகையில் இருந்ததா என சரியான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன் பின்னரே கைது செய்யப்பட வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

இதை விட்டுவிட்டு எழுந்தமானமாக அவரை கைது செய்யுமாறு கூறுவதை அரசியல் நோக்குடையதாகவே பார்க்க முடியும். ஒரு அரசியல்வாதி பல தரப்பட்டவர்களுடனும் தொடர்பை பேணுவார்கள். இந்நிலையில் அவர்களுடைய செயற்பாடுகளுக்கு அரசியல்வாதிகள் முழுமையான பொறுப்பாளிகளாக இருக்க முடியாது. இந்த விடயத்தில் பல குற்றச்சாட்டுகள் முன்னாள் அமைச்சர் ரிசாத் மேல் சுமத்தப்படுகின்றது. இந்த குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை முறையான விசாரணை மூலமே கண்டு கொள்ள முடியும்.

இதன் பின்னரே அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமா, இல்லையா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும்.

கேள்வி : அண்மைக்கால நிகழ்வுகளின் பின்னர் தமிழ் – முஸ்லிம் இன ஒற்றுமை தேவையென பேசப்படுவது தொடர்பில்?

பதில் : கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். தற்போது முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ் – முஸ்லிம்களின் சரியான புரிந்துணர்வே சிறுபான்மையினங்களின் பாதுகாப்புக்கு அடிப்படையான விடயமாகும்.

இதனை கருத்தில் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் வட மாகாண சபையில் கூட்டமைப்புக்கு கிடைத்த போனஸ் ஆசனம் மூலம் அஸ்மினை மாகாண சபை உறுப்பினராக்கினார். இதுபோல் கிழக்கு மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்புக்கு 11 ஆசனங்கள் இருந்தபோதும் 7 உறுப்பினர்களை கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினைச் சேர்ந்த அகமட் நஸீரை முதலமைச்சராக்கியதுடன் இரு அமைநச்சு பதவிகளையும் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ_க்கு வழங்கியது.

அச்சமயம் கூட்டமைப்பிலுள்ள சிலர் அதனை எதிர்த்தனர். இப்படியாக பல விட்டுக் கொடுப்புககள் செய்யப்பட்ட போதிலும் கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தில் முஸ்லிம் தலைமைகள் மிக கடுமையாக அதன் உருவாக்கத்தை எதிர்த்தனர்.

அப்பிரதேச செயலகம் ஏற்படுத்தப்படுவதால் கல்முனையில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. எனினும் அதை உருவாக்கவிடாது மிக தீவிரமான செயற்பாடுகளில் முஸ்லிம் தலைமைகள் ஈடுபட்டிருந்தன.

அரசாங்கமும் அவர்களின் நியாயமற்ற நிலைப்பாட்டை ஏற்று கல்முனை தமிழ் பிரதேச செயலக உருவாக்கத்தை பின்னடித்து வருகின்றது.
ஆகவே, இன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர விட்டுக் கொடுப்புகள் மூலமே ஏற்படும். இந்த நல்லிணக்கமே ஆரோக்கியமான இன ஒற்றுமையாக அமையும்.

கேள்வி : அரசியல் தீர்வின் தற்போதைய நிலைமை என்ன?

பதில் : அரசியல் தீர்வு என்பது இன்றைய சூழ்நிலையில் நடக்க முடியாத ஒன்றென அனைவரும் அறிந்ததே. தென்னிலங்கையில் இருக்கக் கூடிய தற்போதைய சூழ்நிலையில் சிங்கள தலைமைகள் ஒன்றுபட்டு தமிழர்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை வழங்க மாட்டார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

என்னைப் பொறுத்த வரையில் சிங்கள தலைமைகளில் பெரும்பாலானவர்கள் அதிகாரப்பகிர்வுக்கு எதிரானவர்களாக இருக்கின்றனர். பேச்சளவில் அதிகாரப் பகிர்வு நியாயமான தீர்வு என பேசினாலும் செயற்பாடு என்று வருகின்ற வேளையில் பின்னடிப்பார்கள் குழப்புவார்கள். இது கடந்த 70 வருடமாக பார்த்து வரும் விடயம்.

இந்த விடயத்தில் சிங்கள தலைமைகள் ஒற்றுமையாக செயற்படுகின்றனர். தமிழர்களை பொறுத்த மட்டில் தமிழ் தலைமைகள் அனைத்தும் எங்களுக்கு இதுதான் வேண்டுமென தெளிவாக சொல்லக்கூடிய ஒற்றுமையின்றி இருக்கின்றோம். ஏறக்குறைய ஒரே விடயத்தை கட்சிகள் அனைத்தும் சொன்னாலும் வௌ;வேறு சொற்பதங்களை பாவித்து ஏதோ தான் சொல்வது தான் சரியான தீர்வாக தமிழ் மக்களுக்கு இருக்கும்.

தாம் தான் மிகச்சிறந்த தமிழ்த் தேசியவாதியென்றும் மற்றவர்கள் தமிழ்த் துரோகி என்றும் கூறி 70 வருட காலத்தை கடத்திவிட்டோம். இந்த நிலைமை மாறி நாம் அனைவரும் ஒன்றாக இன்று ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும்.

கேள்வி : எதிர்வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு கூட்டமைப்பு செய்றபட போகின்றது?

பதில் : எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை பொறுத்தமட்டில் முடிவுகள் எடுக்கப்படவில்லை.

எவர் ஜனாதிபதியாக வந்தாலும் ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் அவர்கள் கொடுக்கக்கூடிய வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டார்கள்.
அவர்களுடன் எழுத்து மூல ஒப்பந்தமோ மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் செய்யப்படும் ஒப்பந்தமோ நிறைவேற்றப்படுமென்று நான் நம்பவில்லை. இந்திய – இலங்கை ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை அதிகாரங்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை கண்ணூடாக பார்க்கின்றோம்.

அன்று பண்டா – செல்வா ஒப்பந்தம் கிழிக்கப்பட்டதையும் டட்லி – செல்வா ஒப்பந்தம் மூலம் உள்ளுராட்சி சபைகள் அமைச்சை மு. திருச்செல்வம் ஏற்று அதன் மூலம் அதிகாரப் பரவலாக்கம் நடைமுறைப்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்குமென ஏற்றுக்கொண்ட போதும் சிங்கள தலைமைகள் தமிழ் மக்களுடைய நியாயமான கோரிக்கையை நடைமுறைப்படுத்தவில்லை.

ஆகவே, அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் யாரோ ஒரு வேட்பாளரை நம்பி அவருடன் எழுத்து மூல உறுதிமொழிகளை வாங்கினாலும் கூட அவர் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நான் எதிர்பார்க்கவில்லை.

ஆகவே, வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின் தமிழத் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் வேட்பாளர்களில் ஓரளவு நியாயமாக நடந்து கொள்ளக்கூடிய சொன்னதை நிறைவேற்றக்கூடியவர் என கருதப்படக்கூடியவரை ஆராய்ந்து முடிவெடுக்கும். (நன்றி தினக்குரல் : 09.06.2019 – ரொஷான் நாகலிங்கம்)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More