மாவனல்ல நகரை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் அடித்து சேதமாக்கப்பட்ட சம்பவங்கள், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் உத்தரவுக்கு அமைய இடம்பெற்றவை என சி.ஐ.டி. மாவனல்ல நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு நேற்று முற்பகல் மாவனல்ல நீதிவான் உப்புல் ராஜகருணா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி காவற்துறைப் பரிசோதகர் மாரசிங்க இதனை நீதிவானுக்கு அறிவித்தார்.
இதன்போது இந்த சிலை உடைப்பு விவகாரத்தை பூரணமாக நெறிப்படுத்தியுள்ள சஹ்ரான், அதனை முன்னெடுத்த சந்தேக நபர்களுக்கு ‘நீங்கள் போய் சிலைகளை உடைத்துவிட்டு என்னிடம் வாருங்கள்’ என கூறியுள்ளதாகவும் சி.ஐ.டி.யின் விசாரணை அதிகாரி நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைகள் நேற்று மாவனெல்லை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே விளக்கமறியலில் உள்ள 14 சந்தேக நபர்கள் கடும் பாதுகாப்புக்கு மத்தியின் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டனர்.
அத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் சி.ஐ.டி.யின் பிடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 சந்தேக நபர்களும் நேற்று விஷேட பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு நீதிவானின் மேற்பார்வைக்காக முன்னிலை செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் இதுவரை 34 சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர். #மாவனல்ல #சிஐடி #சஹ்ரான்ஹாஷிம் #உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்கள்