மியன்மாரிலிருந்து 65 ரோஹிங்கியா முஸ்லிம்களை மலேசியாவுக்கு கடத்த எடுக்கப்பட்ட முயற்சி, தாய்லாந்தின் தென் கடல்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதன் போது குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 65 ரோஹிங்கியா அகதிகள் மீட்கப்பட்டு சதுன் மாகாண முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை கடத்துவதில் ஈடுபட்ட சங்கோம் பப்ஹான் என்னும் தாய்லாந்து நாட்டு படகோட்டி ஆட்கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்களை மலேசியாவுக்கு அழைத்து செல்ல மியன்மாரை சேர்ந்த ஒருவரால் படகோட்டிக்கு சுமார் 2 லட்சம் ரூபா கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் ரோஹிங்கியா அகதிகளா அல்லது சட்டவிரோத தொழிலாளர்களா என்பதனை கண்டறிய விசாரணைகளை தீவிரப்படுத்தமாறு தாய்லாந்து பிரதமர் பிரயூத் சன்-ஒ-சா அறிவுறுத்தியுள்ளார்.
2015 ஆம் ஆண்டு பெருமளவான ரோஹிங்கியா முஸ்லிம்கள், மற்றும் பங்களாதேஸ் நாட்டவர்களை இந்தக் கடல்பகுதியால் மலேசியாவுக்கு கடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
#மியன்மாரிலிருந்து #மலேசியா #ரோஹிங்கியா முஸ்லிம்கள் #படகு விபத்து #Rohingya-Muslims