கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் நடைபெற்ற தாக்குதல்களில் தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய சந்தேக நபரான பிரென்டன் டாரன்ட் தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
நியூசிலாந்து மசூதியில இடம்பெற்ற இந்த தாக்குதல் தொடர்பாக 51 பேரை கொலை செய்தது, 40 பேர் மீது கொலை முயற்சி, ஒரு பயங்கரவாத குற்றம் உள்ளிட்ட வழக்குகள் பிரென்டன் டாரன்ட் மீது பதியப்பட்டுள்ளன. 29 வயதாகும் அவுஸ்திரேலியரான பிரென்டன் சிறையில் இருந்து காணொளி இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். அவரது சட்டத்தரணி வாதத்தை முன்வைத்தபோது பிரென்டன் அமைதியாக உட்கார்ந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஓகஸ்ட் 16-ம் திகதி வரை வழக்கினை ஒத்திவைத்த நீதிபதி அதுவரை பிரென்டனை சிறையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மசூதி தாக்குதல் தொடர்பில் பிரென்டன் கடந்த மார்ச் 15-ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். தாக்குதல் சம்பவத்தினை சந்தேகநபர் தனது தலையில் கட்டியிருந்த கமரா மூலமாக முகப்புத்தகத்தில் நேரலையாக ஒளிபரப்பினார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம், சந்தேக நபர் குறித்த புகைப்படங்களை வெளியிடுவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டிருந்தது.
தற்போது சந்தேக நபர் பிரென்டன் ஒக்லாந்து சிறையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சிறை நியூசிலாந்தின் கடுமையான சிறைகளில் ஒன்றாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
#நியூசிலாந்து #மசூதி #தாக்குதல் #ரென்டன் டாரன்ட்