தமிழகத்தில் நீர் மேலாண்மை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில் பாலாற்றில் இருந்து உதயேந்திரம் ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் இந்தக் கால்வாயின் வழியாக தண்ணீர் எளிதாகச் செல்ல வழிவகை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னையில் நிலவும் கடுமையான தண்ணீர் பஞ்சத்தைப் போக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் குறித்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின்போது தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு காண மாநில அரசு எடுத்த நடவடிக்கை என்ன, ஏரி குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, மழைநீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை என்ன, சென்னைக்கு குடிநீர் வழங்கும் செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகள் வறண்டு வந்த நிலையில் அதற்காக இதுவரை மாற்று ஏற்பாடுகளை செய்யாதது ஏன் முன்னெச்சரிக்கையாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பல் வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர்.
#நீர் மேலாண்மை #நடவடிக்கை #தமிழக அரசு #உயர்நீதிமன்றம் #கண்டனம்