யுத்தத்திற்கு பின்னர் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்கள் கிராம மட்ட பெண் சுய தொழில் அமைப்புக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் நீடித்து நிலைக்கக் கூடிய விதமாக எவ்வாறு பெண்கள் குழுக்கள், அமைப்புக்கள் செயற்பட வேண்டு என்பது தொடர்பாக விழிப்புணர்வு செயலமர்வு இன்று வியாழக்கிழமை (27) இடம் பெற்றது
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழுத்தலைவர் யாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த செயலமர்வு காலை 10 மணியளவில் ஆரம்பமானது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு , மாந்தை மேற்கு, முசலி , நானாட்டான் , மன்னார் தீவக பகுதிகளை சேர்ந்த பெண் அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும் சுய தொழில் முயற்சியாளர்கள் உட்பட மெசிடோ நிறுவனத்தினால் கிராம ரீதியில் அமைக்கப்பட்ட பெண்கள் சிறு குழு அங்கத்தவர்களின் பங்கு பற்றுதலுடன் குறித்த பயிற்சி நிகழ்வு இடம் பெற்றது.
நாடளாவிய ரீதியில் பெண்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அடக்கு முறைகள் , வரதட்சனைக் கொடுமை , போதைப் பொருள் பாவனை, பெண்கள் மீதான துஸ்பிரயோகம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கான நடை முறையான ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் கிராம ரீதியிலும் மாவட்ட தேசிய ரீதியிலும் பெண்கள் அமைப்புக்களை பதிவு செய்வது தொடர்பாகவும் நீடித்து செயற்படக் கூடிய பெண்கள் குழுக்களை அமைத்து அதன் மூலம் பயனடையக்கூடிய வழிவகைகள் தொடர்பாகவும் மன்னார் மாவட்ட தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் உள சமூக பயிற்சிவிப்பாளர்களால் விரிவுரைகள் வழங்கப்பட்டது.
அதே நேரத்தில் ஆண் ஆதிக்க தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடை முறை மற்றும் சட்ட ரீதியான உதவிகள் தொடர்பாகவும் தெளிவு படுத்தபட்டமை குறிப்பிடதக்கது. #பெண்களை தலைமைத்துவ #அடக்கு முறைகள் #குடும்பங்கள்