மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு நினைவு இல்லமாக மாற்றும் பணி ஆரம்பமாகியுள்ளதுடன் நிலத்தை கையகப்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம்திகதி மரணம் அடைந்த ஜெயலலிதா, தனது வாழ்நாளில் பெரும் பகுதியை சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் தான் கழித்தார்.
இந்தநிலையில், போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எழத் தொடங்கியதையடுத்து நிறைவேற்றும் வகையில், தமிழக அரசும் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று அறிவித்திருந்தது.
தற்போது, அதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் முதற்கட்டமாக, நில எடுப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் . இந்த நில எடுப்பு தொடர்பாக ஆட்சேபனை ஏதும் இருப்பின் நிலத்தின் சார்புடைய நபர் தமிழ்நாடு அரசிதழ் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களுக்கு உள்ளாக சென்னை கிண்டியில் உள்ள நில எடுப்பு அலுவலர் மற்றும் தென்சென்னை வருவாய் கோட்டாட்சியரிடம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை அவரது தாயார் சந்தியா 1967-ம் ஆண்டு 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாக்கு வாங்கியிருந்தார். இன்றைக்கு அதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. #ஜெயலலிதா #நினைவு இல்லமாக #போயஸ் கார்டனில் #வேதா