இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 25 அரச இணையதளங்கள் இணையத்திருடர்களினால முடக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. நேற்றையதினம் மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கணினி அவசரக் காலக் கண்காணிப்புக் குழுவிடமிருந்து கிடைத்த தகவலின்படி, இந்த ஆண்டின் ஜனவரி முதல் மே வரையிலான ஐந்து மாதங்களில் மத்திய மாநில அரசுகளின் 25 இணையதளங்கள் இவ்வாறு இணையத்திருடர்களினால் முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டில் 199 இணையதளங்களும், 2017ஆம் ஆண்டில் 172 இணையதளங்களும், 2018ஆம் ஆண்டில் 110 இணையதளங்களும் இதுபோன்று முடக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும், யாரிடமிருந்தும் இணையத் தாக்குதல்கள் வரலாம் எனத் தெரிவித்த அவர் இத்தாக்குதல்களைத் தடுக்க அரசு தரப்பிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார். #அரச இணையதளங்கள் #முடக்கப்பட்டுள்ளன #மத்திய அரசு