மகிந்த அணியினர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடமிருந்து பாடங்களை கற்க வேண்டும் என பெருந்தெருக்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நாவலப்பிட்டி பகுதியில் வசிக்கும் பல ஆண்டுகள் காணி உறுதி பத்திரம் இல்லாமல் இருந்த சுமார் 1200 பேருக்கு ரன் பீம எனும் காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று நாவலப்பிட்டி பவ்வாகம பகுதியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர்,
ஆட்சி செய்ய முடியாது என கூறியவர்கள் இன்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயல்வதாகவும் 2015ல் இருந்த அரசாங்கத்திற்கு ஆட்சி செய்ய மேலும் கால அவகாசம் இருந்தபோதும் ஏன் அவர்கள் அதனை செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
2015ம் ஆண்டு இருந்த அரசாங்கத்திற்கு எதிராக 2012,2013,2014 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபையில் மூன்று பிரேரணைகள் முன்வைக்கப்பட்டதாகவும் அந்த பிரேரணைகள் மூன்றையும் அரசாங்கம் செயல்ப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
அதற்கமைய 2015ம் ஆண்டு மீண்டும் அரசாங்கம் ஆட்சி அமைத்திருந்தால் அந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பொருளாதார தடை வந்திருக்கும் என்றும் அதற்கு முகங்கொடுக்க முடியாமையால் இரண்டு வருடங்கள் எஞ்சி இருந்த நிலையில் அவசர அவசரமாக தேர்தலுக்கு சென்றதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, முன்பு விஜேராஜசிங்க என்ற பௌத்த மன்னன் பெளத்தத்தை தழுவிய இலங்கையின் முதலாவது தமிழ் அரசனாக கருதப்பட்டான் என்றும் அதேபோல் மடு தேவாலயத்தை அமைக்க இடம்பெற்றுக் கொடுத்தவர் கண்டி அரசர் ஒருவர் என்றும் அவர் கூறினார்.
இவற்றை மறந்து இன்று இனவாதத்தை தூண்ட எதிர்கட்சியினர் முயல்வதாகவும் இவர்களுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் அன்று பாராளுமன்றத்தில் நடத்துக் கொண்டதை போன்று சண்டையிட்டு, சொத்துகளுக்கு சேதம் விளைவித்து தம்மப்பத, பைபில் ஆகிய புனித நூல்களை வீசி ஏறிந்து கலகம் செய்ததாகவும் கூறினார்.
அத்துடன் பிரபாகரன்கூட, இவர்கள் பாராளுமன்றத்தில் நடந்துக் கொண்டதை போன்று செயற்படவில்லை என்றும் பிரபாகரனை பிரதிநிதித்துவப்படுத்திய பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இருந்த போதும் அவர்களும் அவ்வாறு நடந்துக் கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மகிந்த அணியினர் எவ்வாறு நடந்துக்கொள்வது என்பதனை பிரபாகரனிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கை கண்டிய மன்னர்களின் கொள்கை என்றும் அதாவது சிறுபான்மை இனத்தையும் சமநிலையில் நடத்த வேண்டும்என்றும் அதனூடாகவே நாடு முன்நோக்கி பயணிக்கும் என்றும் தெரிவித்தார்.
இதேவேளை இந்நிகழ்வின், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க, திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜெயவர்தன, நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.