கர்நாடக மாநிலத்தில் 4-வது முறையாக முதல் அமைச்சராக இன்று மாலை பதவியேற்க உள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளர்.
கர்நாடக மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து, பாஜக மாநில தலைவர் எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார் கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி அரசு ஆட்சிசெய்தது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது. நேற்று முன்தினம் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதனையடுத்து குமாரசாமி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஆளுநர், புதிய அரசு அமையும் வரை முதல் அமைச்சர் பதவியில் நீடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதற்கிடையே, புதிய அரசை அமைக்கும் பணியில் கர்நாடக பா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக களம் இறங்கினர். இந்நிலையில், காலை 10 மணிக்கு ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்த எடியூரப்பா, பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதாக கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரியதுடன் இன்றே பதவியேற்பு நிகழ்வையும் நடத்துமாறு கோரிய நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.