வனவிலங்குகளால் மனித உயிர்கள் பலியானால் அதற்கு பொறுப்பேற்க முடியாது என தமிழக வனத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத் தலைவரான வி.லோகநாதன் தாக்கல் செய்த மனுவில், குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், அனைவருக்கு வீடு திட்டத்தின் கீழ், 4 ஆயிரத்து 710 வீடுகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதிகளை ஆக்கிரமித்து கட்டுமானங்கள் பெருகி வருவதால், தங்களது குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் புகுந்து விளைநிலங்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வருகின்றன. வனப்பகுதியில் தொடரும் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளால் நிலச்சரிவு அபாயம், விலங்குகள் நடமாட்டம், இயற்கை வள பாதிப்பு, மழை பாதிப்பு உள்ளிட்டவை ஏற்படவும் வாய்ப்புள்ளது
மேலும் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளையும் ஆக்கிரமித்து குடியிருப்புகள் சட்ட விரோதமாக கட்டப்படுவதால் இந்தத் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக தமிழக வனத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு வனவிலங்குகளால் மனித உயிர்கள் பலியானால் அதற்கு பொறுப்பேற்க முடியாது என தமிழக வனத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #வனவிலங்கு #மனிதஉயிர்கள் #தமிழக வனத்துறை