கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையில் கனடா சட்டத்தை மீறி உள்ளார் என நெறிமுறைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்று கண்டுபிடித்துள்ளது. எஸ்.என்.சி லவாலின் விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் மீது செல்வாக்கு செலுத்த ஜஸ்டின் முயன்றதாக அந்த அமைப்பின் ஆணையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஆணையாளரின் அறிக்கையை தாம் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ள கனடா பிரதமர் அறிக்கையின் இறுதி முடிவில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கனடாவில் ஒக்டோபரில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த விசாரணை முடிவானது ஜஸ்டினுக்கு ஒரு பிரச்சனையாக உருவெடுக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான எஸ்.என்.சி லவாலின் நிறுவனத்தில் 9,000க்கும் அதிகமான கனடா மக்கள் பணிபுரிகிறார்கள். லிபியாவில் கடாபி ஆட்சி காலத்தில் ஒரு கட்டுமான ஒப்பந்தத்தைப் பெற இந்த நிறுவனம் லிபிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது என எழுந்துள்ள விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த நிறுவனத்துக்கு சாதகமாக ஜஸ்டின் செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #கனடா #பிரதமர் #எஸ்.என்.சி