கடந்த இரண்டு வாரங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 4,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கைதானவர்களைக் காவலில் வைக்க காஷ்மீர் மாநிலச் சிறைகளில் இடமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அரசுத் தரப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
பொது பாதுகாப்புச் சட்டம் என்ற சர்ச்சைக்குரிய சட்டப்பிரிவில் ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்தச் சட்டப்பிரிவின்படி கைது செய்யப்பட்டவர்களை இரண்டு வருடங்கள் வரை விசாரணையோ, குற்றப்பத்திரிகை பதிவு இல்லாமலோ சிறையில் வைக்கலாம் என நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேவேளை கடந்த சனிக்கிழமை காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் நடந்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், காஷ்மீரில் நேற்று வரை 50,000 தரைவழித் தொலைபேசி இணைப்புகள் இயங்கத் தொடங்கிவிட்டதாகவும், இன்று திங்கட்கிழமை முதல் பாடசாலைகள் செயல்படத் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #காஷ்மீர் #கைது #சிறைகளில் #இடமில்லை