நர்மதா அணை விவகாரம் தொடர்பாக இடம் மாற்றப்படுபவர்களின் நிலையை எடுத்துக்கூறும் விதமாக கடந்த ஓகஸ்ட் 25ம் திகதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்த சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கரின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்த்ததை தொடர்ந்து அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையின் மதகுகளை மூடவும், அணையின் நீர்மட்டத்தை 138.68 மீட்டராக உயர்த்தவும் மாநில அரசு முடிவு செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த அணை திட்டத்தால் வெளியேற்றப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கக்கோரியும் சமூக ஆர்வலர் மேதா பட்கர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வந்தார்.
அவருக்கு ஆதரவாக பர்வானி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான கிராமத்தினரும் போராட்டத்தில் களமிறங்கினர்.
அணையின் நீர் மட்டத்தைக் குறைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான மறுவாழ்வு செய்யவும் குஜராத் அரசாங்கத்தையும் மத்திய அரசையும் கட்டாயப்படுத்துமாறு மத்திய பிரதேச அரசாங்கத்தை மேதா பட்கரின் நர்மதா பச்சாவ் அந்தோலன் ) இயக்கம் வலியுறுத்தியது.
மேதா பட்கர் போராட்டத்தை கைவிடுமாறு மாநில உள்துறை அமைச்சர் பாலா பச்சன் சில நாட்களுக்கு முன்பு போராட்ட இடத்திற்கு நேரில் வந்து கோரிக்கை விடுத்தார். ஆனால் மேதா பட்கரும் போராட்டக்காரர்களும் தங்கள் அறப்போரை கைவிடவில்லை. தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் மேதா பட்கரின் உடல்நிலை மோசமடைந்தது.
மத்திய பிரதேச அரசு முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ் சி பெஹர் அவர்களை மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் நேற் மேதா பட்கரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட அனுப்பியுள்ளார். அதே சமயம், மேதா பட்கருக்கு விளக்கமளிக்கும் வகையில், மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத், பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை அறிந்து தீர்ப்பதற்கு தனது அரசாங்கம் உடன் தொடர்ந்து செயல்படுவதாக கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு கோரிக்கைகளை ஆராய நர்மதா பள்ளத்தாக்கின் கிராமங்களில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கமல் நாத் கூறினார். சர்தார் சரோவர் அணையில் நீர்மட்டத்தை குறைப்பதற்காக மத்திய பிரதேச அரசு மேற்கொண்ட முயற்சிகள் குறித்து எஸ் சி பெஹர் நேரில் விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து, மேதா பட்கர் நேற்று நள்ளிரவில் தனது உண்ணாவிரததை முடித்துக்கொண்டார்.