Home இலங்கை இலங்கைக்கு வெளியில் பொறிமுறை அவசியம் – பி.மாணிக்கவாசகம்…

இலங்கைக்கு வெளியில் பொறிமுறை அவசியம் – பி.மாணிக்கவாசகம்…

by admin

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான இலங்கையின் பிரச்சினைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாகவே தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிந்து அதற்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கான தொடர் போராட்டம் உள்நாட்டில் ஆயிரமாவது தினத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்ற நிலையிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நெருக்குதல்கள், அச்சுறுத்தல்கள், வாழ்க்கை நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த வீதியோரப் போராட்டத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய குடும்ப உறவினர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். தன்னெழுச்சியாக ஆரம்பமாகி தீவிரமடைந்துள்ள இந்தப் போராட்டத்திற்கு அவசியமான அரசியல் தலைமைத்துவ வழிகாட்டல் கிடைக்கவில்லை. அந்தத் தலைமைத்துவத்தின் மீது பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கையற்றிருப்பதே அதற்கு முக்கிய காரணம்.

‘ஆரம்பத்தில் அரசியல் தலைமைத்துவம் கிடைத்திருந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனாலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உள்ளே ஏற்பட்டிருந்த போட்டித் தன்மையும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களைத் திருப்திப்படுத்தாமையும்தான் அரசியல் தலைமைத்துவத்தின் மீது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நம்பிக்கை இழக்கச் செய்திருந்தது’ என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான செயற்பாட்டாளர் ஒருவர் கூறினார்.

பல்வேறு காரணங்களுக்காக அந்த செயற்பாட்டாளர் தன்னை அடையாளப்படுத்த விரும்பவில்லை. ஆனாலும், போராட்டத்தின் நிலைமை குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ‘அரசியல் தலைமைகள் மீதான நம்பிக்கையற்ற இந்த நிலையில்தான், வெளிச் சக்திகளிடம் இருந்து கிடைத்த ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அரசியல் தலைமைகளில் இருந்து விலகிச் செல்வதற்கு ஊக்குவித்திருந்தது’ என குறிப்பிட்டார்.

அதேவேளை, ‘ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதிகோரவும் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கும் இந்த சக்திகளே உந்து சக்தியாக இருக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது’ என்றும் அந்த பெயர் குறிப்பிட விரும்பாத செயற்பாட்டாளர் தெரிவித்தார்.

நீதியைத் தேடி அலையும் மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்

இலங்கையில் தமிழர் பிரதேசங்களாகிய வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் போன்ற பல இடங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி பேரணிகளும் போhராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கிழக்கில் கல்முனையிலும், வடக்கில் ஓமந்தையிலும் இடம்பெற்ற பேரணியுடன் கூடிய போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த இரண்டு இடங்களிலும் குடும்ப உறவினர்கள் தமது உறவுகளை இராணுவத்தினரிடம் சரணடைவதற்காகக் கையளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலும், புலம் பெயர் தேசங்களிலும் இந்த சர்வதேச தினத்தன்று பரவலாக சர்வதேச அளவில் பல்வேறு அமைப்புக்களும் போராட்டங்களையும் கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து ஐநாவுக்கும் சர்வதேசத்திற்கும் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களையும் கையளித்துள்ளன. இவற்றில் தமிழ்த்தேசிய அரசியல் அவதானிப்பு மையம் மற்றும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு என்பன இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதே காணாமல் போயுள்ள உறவுகளுக்கான நீதியைப் பெறுவதற்கு ஒரே வழி என்று கூறியுள்ளன.

உள்நாட்டு சூழலும், பேரினவாத தலைமைகளும், அவற்றுக்குத் துணைபோகும் தமிழ்த்தரப்புக்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடிக் கண்டறிவதற்கு இடமளிப்பதாக இல்லை என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தமிழ்த்தேசிய அரசியல் அவதானிப்பு மையம் சாட்சிகளை அச்சுறுத்தியும் சாட்சியங்களின் வீச்சை குறைக்கின்ற செயற்பாடுகளில்தான் அவைகள் கதிக கவனத்தைச் செலுத்துகின்றன என சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, சர்வதேச தலையீடுகளும், அழுத்தங்களுமே தொலைத்த உறவுகளை மீட்பதற்கு
இருக்கின்ற ஒரேயொரு வழியாகும். ஆனால் ஐநா மனித உரிமைப் பேரவையில் கடந்த தடவையும் சிறிலங்கா அரசுக்குக் கால அவகாசம் வழங்கியமை உறவுகளைத் தொலைத்த நெஞ்சங்களை வஞ்சிப்பதாக அமைந்துவிட்டது. எனவே மீண்டும் மீண்டும் அரசுக்கு கால அவகாசம் வழங்குவதை நிறுத்தி, குற்றமிழைத்தவர்களை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தி. உறவுகளைக் காணாமல் ஆக்கிய சூத்திரதாரிகளுக்குத் தண்டனையையும் உண்மையையும் நீதியையும் தேடி அலையும் மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய அரசியல் அவதானிப்பு மையம் கோரியுள்ளது.

ஆட்களைக் காணாமல் ஆக்குவது நீண்ட வரலாறு

உயிரைப் பணயம் வைத்து உண்மைக்காகவும், நீதி;க்காகவும் போராடும் மக்களுக்கு சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்று அனைத்துலக ஈழத்தமிழர் வாழ்வுரிமை மையம் கோரியுள்ள அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான் தமிழகத்தில் குரல் எழுப்பியுள்ளார்.

இதற்கிடையில், வலிந்து ஆட்களைக் காணாமல் ஆக்குவதில் இலங்கைக்கு நீண்ட வரலாறு உள்ளது என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டிய தது அறிக்கையில் ஐநா மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் சீரழிந்த மனித உரிமை நிலைமைகளையும் சர்வதேச அளவில் தனது மனித உரிமை நிலைப்பாட்டை உயர்த்துவதற்கு காட்டி வருகின்ற தயக்கத்தையும் இந்த அறிக்கை தோலுரித்துக் காட்டியுள்ளது.

யுத்தத்தின் பின்னரான நிலைமாறு கால நீதியை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைளில் ஒன்றாகிய காணாமல் போனோருக்கான அலுவலகச் செயற்பாட்டின் முக்கியத்துவத்தையும் ஐநா மன்றம் தனது அறிக்கையில் குறித்துக் காட்டியுள்ளது.

நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதற்கான பொறிமுறைகளில் ஒன்றாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஒன்றை அரசு நிறுவியுள்ளது. இந்த அலுவலகம் மாபெரும் பொறுப்பைக் கொண்டிருக்கின்றது என்பது ஐநா மன்றத்தின் நிலைப்பாடு. அது சவால்கள் மிக்க ஆணையை நிறைவேற்ற வேண்டி உள்ளது. அதற்கு அனைத்து அரச அலவலகங்களினதும் ஒத்துழைப்பு அவசியம். நீண்டகால நிiபேறான முயற்சிகளின் ஊடாகவே, நீண்ட காலமாகத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு தீர்வையும் மீட்சியையும் இதன் மூலம் அளிக்க முடியும் என்றும் ஐநா மன்றம் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

முப்பது வருடங்களாகத் தொடர்ந்த தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்ட காலத்தில் மட்டுமல்லாமல், அதற்கு முன்னர் நாட்டின் தென்பகுதியில் இரண்டு தடவைகள் இடம்பெற்ற ஜேவிபியின் ஆயுதக் கிளர்ச்சியின்போதும், அரசினால் ஆயிரக்கணக்கானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதை மறைமுகமாக ஐநா இந்த அறிக்கையில் குறித்துள்ளது.

தனக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சியை அடித்து நொறுக்கி, கிளர்ச்சியாளர்களை வேரறுப்பதற்கான ஓர் உத்தியாகவே ஆட்களைக் காணாமல் ஆக்குகின்ற கைங்கரியம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த உரிமை மீறலுக்கு அரசு பொறுப்பு கூறவே இல்லை என்று அரசியல் அவதானிகளும் ஆய்வாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

செவிடன் காதில் ஊதிய சங்கு போன்ற செயற்பாடு

ஜேவிபியை அடக்கி ஒடுக்குவதற்காகக் கையாளப்பட்ட அதே தந்திரோபாய நடவடிக்கையே விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்திலும் அரச படைகள் மேற்கொண்டிருந்தன. ஆட்களைக் காணாமல் ஆக்குவது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். அது சர்வதேச மனிதாபிமான சட்டமீறலும் ஆகும். இந்த நடவடிக்கைக்கு பொறுப்பு கூற வேண்டும் என்று சர்வதேசமும், ஐநா மனித உரிமைப் பேரவையும் இலங்கை அரசாங்கத்தை பிரேரணைகளின் மூலம் வலியுறுத்தி இருக்கின்றன. ஆனால் அந்தப் பிரேரணைகளுக்கு இணை அனுசரணை வழங்கிய போதிலும் அவற்றை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கி;ன்ற போதிலும் ஐநாவும்சரி, சர்வதேசமும்சரி, அரசுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுக்கவே இல்லை.

இத்தகைய பின்புலத்தில்தான் ஐநா மன்றம் ஆட்களைக் காணாமல் ஆக்குவதை நீண்ட வரலாறாக இலங்கை கொண்டிருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய வெறும் அறிக்கைகள் தனது பொறுப்பு கூறுலை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசுக்கு வழங்குவதாகத் தெரியவில்லை.

நிலைமாறுகாலத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கான பொறிமுறைகளை உருவாக்கி அதன் ஊடாக மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் என்பற்றை உள்ளடக்கிய போர்க்குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்பது ஐநா மனித உரிமை பேரவையினதும், சர்வதேசத்தினதும் நிலைப்பாடாகும்.

அந்த வலியுறுத்தலின் அடிப்படையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்தி உண்மை நிலைமையைக் கண்டறிவதற்கான ஒரு பொறிமுறையாகவே காணாமல் போனோருக்கான அலுவலகத்தை அரசாங்கம் உருவாக்கியது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடைய கருத்துக்களை உள்ளடக்கி, அவர்களின் பங்களிப்புடன் இந்தப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று ஐநாவினாலும், சர்வதேசத்தினாலும் வலியுறுத்தப்பட்டிருந்த போதிலும், இறுதி நேரத்தில் அரசு அவர்களின் பங்களிப்பின்றி ஒருதலைப்பட்சமாகவே காணாமல் போனோருக்கான அலுவலகத்தை உருவாக்கியது.

இதனால், இந்தப் பொறிமுறை உருவாக்கத்தின்போதே அதற்கு எதிரான கருத்துக்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும், அவர்களுக்காகச் செயற்படுகின்ற அமைப்புக்களும் பதிவு செய்திருந்தன. ஆனால் அரசு அதனைக் கவனத்திற் கொள்ளவில்லை. செவிடன் ஊதிய சங்காக அவற்றைப் புறந்தள்ளிய அரசு காணாமல் போனோருக்கான அலுவலகத்தைக் காலம் தாழ்த்தி தனக்கே உரிய இழுத்தடிப்பு முறையில் உருவாக்கியது.

பரிந்துரை செய்யலாம் நிறைவேற்றுவது அரசின் கைகளில்

அலுவலகம் உருவாக்கத்திற்குப் பெருமளவில் பிரசாரம் அளிக்கப்பட்ட போதிலும், அந்த அலுவலகத்தை உருவாக்குவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒன்றரை வருடங்களின் பின்பே அதற்கான ஆளணியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார். ஆளணி நியமிக்கப்பட்டபோதிலும், அதற்கான அமைவிடம் எது என்பதைத் தீர்மானிப்பதிலும் அரசு உரிய அவசரத்தையோ அக்கறையையோ காட்டவில்லை. மந்த கதியிலேயே செயற்பட்டது.

இத்தகைய ஒரு பின்புலத்தில்தான் வட மாகாணத்திற்கான இரண்டாவது அலுவலமாக காணாமல் போனோருக்கான அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் சீர்கெட்ட ஒரு நிலைமை என்று வர்ணிக்கத்தக்க வகையில் அரசு திறந்தது.

காணாமல் போனோருக்கான அலவலகத்தின் செயற்பாடுகளில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் அக்கறை செலுத்தவே இல்லை. இதனால் ஆரம்பம் முதலே அந்த அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களும், அவர்கள் சார்பான அமைப்புக்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் அதன் அலுவலகம் திறக்கப்படுவது பற்றிய அறிவித்தலும் எதிர்ப்பையே எதிர்கொண்டிருந்தது.

அந்த அலுவலகத் திறப்பின்போது மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பைத் தெரிவித்து தடங்கல்களை ஏற்படுத்துவார்கள் என்று அஞ்சிய அரசு தனது அதிகாரிகளைக் கொண்டு அதனை அதிகாலை வேளையில் சம்பிரதாயத்திற்காக அதனைத் திறந்து வைத்த உடனேயே மூடியது. அன்றைய தினம் யாழ் அரச செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் மற்றும் ; செய்தியாளர்களுடனும் சந்திப்பு நடைபெற்றது. அந்த அலுவலகத்திற்குப் பொறுப்பான தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் அங்கு வெளியிட்ட கருத்துக்கள் உண்மை நிலைமையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன.

போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது என்றும் அவர்கள் தற்காலிகமாகப் பதவி நீக்குமாறு நாங்கள் அரசாங்கத்திற்குப் பரிந்துரைத்தோம். ஆனால் அதற்கு மாறாகவே காரியங்கள் நடைபெறுகின்றன. பரிந்துரைகளை மட்டுமே எம்மால் வழங்க முடியும். அதற்கான முடிவை மேற்கொள்வது அரசாங்கத்தின் கைகளிலேயே உள்ளது. அதில் எம்மால் தலையிட முடியாது என அவர் கூறியுள்ளார்.

அதற்கும் அப்பால் காணாமல் போனோருக்கான அலுவலகம் ஒருவர் குற்றம் புரிந்துள்ளார் என்பதைக் கண்டறிந்து அவரைத் தண்டிக்கும் அதிகாரம் கொண்டதல்ல. அதற்குத் தண்டிக்கும் வல்லமை கிடையாது என்று அந்த அலுவலக உருவாக்கச் சட்டம் கூறுகின்றது. காணாமல் போனோருக்கான அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டு, அதற்கான ஆளணி நியமனம் செய்யப்பட்ட உடன் அரச நாளிதழாகிய டெயிலி நியூஸுக்கு வழங்கிய ஒரு நேர்காணலில் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

என்ன செய்ய முடியும்?

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்த முடியுமே தவிர, அந்த விசாரணைகளில் காணாமல் போனோருக்கான அலுவலகம் கண்டறிகின்ற விடயங்களை குற்றவியல் மற்றும் சிவில் விசாரணை நடவடிக்கைகளில் பயன்படுத்த முடியாது. ஒரு குற்றவியல் விசாரணைகளில் இந்த விடயங்களை சாட்சியமாகப் பயன்படுத்தவும் முடியாது என அவர் கூறியுள்ளார்.

ஆனாலும், விசாரணைகளில் குற்றவியல் சட்டம் மீறப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்தால், அதனை குற்ற விசாரணை செய்யும் அதிகாரிகளுக்கு அல்லது வழக்குத் தொடரும் அதிகாரமுள்ளவர்களுக்கு பரிந்துரை செய்வதற்குப் பூரண சுதந்திரம் உண்டு. ஆனால் அதனை நிறைவேற்றுவதற்குரிய அதிகாரம் காணாமல் போனோருக்கான அலுவலகத்திற்கு இல்லை. அந்த விடயங்கள் தொடர்பிலான மேல் விசாரணைகளை நடத்துவதும் அந்தந்த அதிகாரிகள் அல்லது அதிகார அமைப்புக்களிடமே உள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவை ஒத்த நிறுவன உருவாக்க அமைப்பைக் கொண்டுள்ள போதிலும், காணாமல் போனோருக்கான அலுவலகம் கண்டறிகின்ற விடயங்களை நிறைவேற்றுவதற்கும் அந்த விடயங்களை வெற்றியடையச் செய்வதற்கும் அரசியல் ரீதியான அரசாங்கத்தின் இசைவும் விருப்பமும் மிகவும் அவசியம்.

இந்த அலுவலக விசாரணைகளின் மூலம் கண்டறியப்படுகின்ற விடயங்கள் ஆவணப்படுத்தப்பட்டாலும்கூட அவற்றை வேறு சட்ட அமுலாக்கல் நிறுவனங்கள் சாட்சியங்களாகப் பயன்படுத்த முடியாத போதிலும், அவற்றின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளுக்கான பரிந்துரைகளைச் செய்ய முடியும்.

அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலன்களுக்கு வேறு எந்த வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதற்கான பரிந்துரைகளையும் செய்ய முடியும். சமூக உளவியல் மேம்பாட்டு உதவிகளையும் பரிந்துரைக்க முடியும் என்றும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய வெறுமனே ஆவணத்தை மட்டும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதற்கும் அப்பால் அவர்களுக்கு என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பது பற்றிய உண்மை நிலைமையை அறிய விரும்புகின்றார்கள். விசாரணைகளில் கண்டறிகின்ற உண்மைகளை முடியுமான சந்தர்ப்பங்களில் மாத்திரமே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் வெளிப்படுத்த முடியும். அதற்கும் அப்பால் உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான துயரத்தை இல்லாமல் செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்பதே காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் அதிகால எல்லைகளாகவும் அதனால் இயலக்கூடிய விடயங்களாகவும் உள்ளன.

இத்தகைய மேம்போக்கான அதிகாரங்களைக் கொண்டுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் ஊடாகத் தமது நீதிக்கான கோரிக்கை நிறைவேற்றப்படமாட்டாது என்பதில் காணாமல் ஆக்கப்பட்டவரிகளின் உறவுகள் உறுதியாக உள்ளனர். இதன் காரணமாகவே அந்த அலுவலகத்தினால் பயனில்லை என்றும் அவர்கள் வாதிடுகின்றார்கள். அதன் செயற்பாட்டுக்கு எதிராகக் கருத்துரைக்கின்றார்கள். போராட்டத்தையும் நடத்துகின்றார்கள்.

இத்தகைய பின்புலத்தில்தான் பிரித்தானிய தமிழர் பேரவை, அவஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ், கனடிய தமிழ்க் காங்கிரஸ், அமெரிக்க தமிழர் செயற்பாட்டுக்குழு உள்ளிட்ட புலம்பெயர் அமைப்புக்களும் ஏனைய பல அமைப்புக்களும் இலங்கைக்கு வெளியில் ஒரு பொறிமுறையை உருவாக்கி அதன் ஊடாகக் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தள்ளன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தையொட்டி முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் கோரிக்கை வெறுமனே சம்பிரதாய கோரிக்கையாக மாத்திரம் கடந்து செல்ல அனுமதிக்கக் கூடாது. அது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு, அந்தக் கோரிக்கை வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளிலேயே உண்மையையும் நீதியையும் தேடி அலைபவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான வழி பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More