இணுவிலில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தரையும் குடும்பப் பெண்ணையும் எதிர் வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், கொள்ளையிடப்பட்ட நகைகள், மடி கணினி, 4 தொலைபேசிகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களையும் சுன்னாகம் காவற்துறையினர் நீதிமன்றில் முன்வைத்துள்ளனர்.
சுன்னாகம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட இணுவிலில் உள்ள வீடொன்றினுள் நேற்றுமுன்தினம் (15.09.19) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் ஐந்து பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. முகத்தை கறுப்பு துணிகளால் மூடிக்கட்டி, கூரிய ஆயுதங்களுடன் உட்புகுந்த கொள்ளைக் கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. வீட்டில் இருந்த மடிக்கணி , தொலைபேசிகள், நகைகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து கும்பல் அங்கிருந்து தப்பித்திருந்தது. இந்நிலையில் கும்பலின் தாக்குதலில் குடும்பத்தலைவி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டமையை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவற்துறையினர், தடயவியல் விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் அடிப்படையில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற தினமே புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த இராணுவத்தில் பணியாற்றும் உத்தியோகத்தரைக் கைது செய்தனர். அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் மற்றொரு வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டன.
அந்த வீட்டில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் வசித்து வந்த நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளார். அதனால் கொள்ளையிடப்பட்ட பொருட்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் தலைமறைவாகியவரின் மனைவி கைது செய்யப்பட்டார். சந்தேகநபர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.