மயூரப்பிரியன்
யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத்துக்குள் வைத்து காவல்துறை உத்தியோகத்தரைத் தாக்கிய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு மீது மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய கோப்பாய் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்காக நீதிமன்றக் கட்டடத்துக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், காவல்துறை உத்தியோகத்தரின் கன்னத்தில் அறைந்ததுடன், அவர் மீது உமிழ் நீர் துப்பி தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
கல்வியங்காடு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபடச் சென்ற பெண் ஒருவரின் சுமார் 98 ஆயிரம் பெறுமதியுடைய தங்க நகைகளைத் திருடினார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் கோப்பாய் காவல்துறையினாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நீதிமன்றக் கட்டடத்துக்கு அழைத்துவரப்பட்டார்.
அவரை சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பில் ஒப்படைத்துவிட்டு காவல்துறை உத்தியோகத்தர் வழக்குத் தாக்கல் நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.
பின்னர் சந்தேகநபருடன் பேசுவதற்காக அருகில் சென்ற போது, காவல்துறை உத்தியோகத்தரின் கன்னத்தில் அவர் அறைந்தார். அத்துடன், உமிழ் நீரை காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பினார்.
சந்தேகநபரிடமிருந்து விலகிச் சென்ற காவல்துறை உத்தியோகத்தர், நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் அவரை முற்படுத்தி முதல் அறிக்கையை முன்வைத்தார்.
திருட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நீதிவான், சந்தேகநபரை வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் காவல்துறை உத்தியோகத்தரை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய கோப்பாய் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வழக்கு வரும் 30 திகதி நீதிமன்றில் முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. #திருட்டு #சந்தேகநபர் #காவல்துறையினர் #தாக்குதல்