புற்றுநோய் காரணமாக உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலை முல்லைத்தீவில் தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என முல்லைத்தீவு பொலிசாரிடம் பொதுமக்கள் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளனர்.
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடாத்தாக குருகந்த புராண ரஜமகா பௌத்த விகாரை எனும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்து முல்லைத்தீவு காவற்துறையினர் மற்றும் தொல்லியல் திணைக்களம் என்பவற்றின் ஆதரவுடன் பிள்ளையார் ஆலய வழிபாடுகளுக்கு செல்பவர்களுடன் முரண்பாடுகளை தோற்றுவித்து வந்த சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி புற்று நோய் காரணமாக கொழும்பில் இன்று சனிக்கிழமை காலை காலமானார்.
அவருடைய பூதவுடலை முல்லைத்தீவுக்கு கொண்டு வந்து நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் இறுதி கிரியைகளை முன்னெடுத்து உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுவதாக முல்லைத்தீவு மக்களுக்கு தகவல் கிடைக்க பெற்றுள்ளது.
தகவலின் பிரகாரம் இன்றைய தினம் இரவு முல்லைத்தீவு காவல் நிலையத்திற்கு சென்ற ஊரவர்கள் பௌத்த பிக்குவின் உடலை இந்து ஆலயத்திற்கு அருகில் தகனம் செய்வது இந்து மதத்தை அவமதிக்கும் செயற்பாடு எனவும் , அதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியின்மை ஏற்பட சந்தர்பங்கள் உள்ளமையால் , முல்லைத்தீவில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்ய அனுமதிக்க கூடாது என முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.