கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 2,600 ஆண்டுகால வரலாறு புதைந்து காணப்பட்டமை குறித்து கீழடியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சியையும் வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடம் ஒன்றின் உரிமையாளரான கருப்பாயி முதலில் இந்த இடம் தென்னந்தோப்பாக இருந்ததுஎனவும் வறட்சியின் காரணமாக மரங்கள் கருகி போனதால் செங்கல் சூளைக்கு மணல் எடுப்பதற்காக தோண்டியபோது முதலில் செங்கல் சுவர் ஒன்று காணப்பட்டது என பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
அந்த ஊர் இளைஞர்கள் அங்குதான் கிரிக்கெட் விளையாடி வருகின்ற நிலையில் ஒரு நாள் செங்கல் சூளைக்காக மணல் தோண்டும்போது பழங்கால சுவடுகள் கிடைத்ததின் அடிப்படையில் இந்த பகுதியில் தொடர்ந்து தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சி நடத்தி வந்தனர்.
இந்த ஆராய்ச்சியின் போது 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் இங்கு வாழ்ந்தது தெரிவந்துள்ளது. இது எங்களுக்கு மிக பெரிய வியப்பை ஏற்படுத்தியது. பழங்கால தமிழர்கள் வாழ்ந்த ஊரில் நாங்களும் வாழ்ந்து வருவது தமக்கு பெருமை என கீழடியைச் சேர்ந்த இளைஞர் கருப்பசாமி பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்து, ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி மூலம், மதம் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாமல், படிப்பறிவு பெற்றவர்களாக வாழ்ந்துவந்த பழங்கால தமிழர்களின், சங்க கால நாகரிகத்திற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
எலும்பால் செய்யப்பட்ட எழுத்தாணி ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை காண்பதற்காக கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்திற்கு உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரலாறு பயின்று வரும் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள்,பொதுமக்கள், தொல்லியல் ஆர்வலர்கள் என பலரும் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக 520க்கும் மேற்பட்ட விளையாட்டு பொருட்கள், சுடு மண்ணாலான 13 மனித உருவங்கள், 35 காதணிகள், மூன்று விலங்கு உருவங்கள், தங்கம், இரும்பு, செம்பு உலோக தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. ஆனால் இதில் சமய சார்ந்த கடவுள் வழிபாட்டுடன் தொடர்புடைய எந்தப் பொருட்களும் கிடைக்கவில்லை என அகழ்வாராய்ச்சி முடிவில் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.