158
மயூரப்பிரியன்
யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித் , குகன் வழக்கு நாளைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சோஷலிச முன்னிலை கட்சியின் ஏற்பாட்டில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னேடுக்கப்பட்டவுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி சர்வதேச மனிதவுரிமைகள் தினத்தன்று யாழ்ப்பாண நகரில் நடைபெறவிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் ஆவரங்காலில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு கடந்த 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாணையின் போது, இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகின.
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார, குகன் முருகானந்தனின் மனைவி, லலித்குமார் வீரராஜின் தந்தையார் ஆகியோர் ஆரம்பத்தில் சாட்சியமளித்திருந்தனர்.தொடர்ந் து முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல உள்ளிட்ட சிலர் சாட்சியமளித்திருந்தனர்.
இதேவேளை குறித்த வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை யாழ்.நீதிவான் நீதிமன்றம் சாட்சியம் அளிப்பதற்காக அழைப்பாணை விடுத்திருந்தது.
சாட்சி கடந்த தவணையின் போது (ஜூன் 21ஆம் திகதி), மன்றில் முன்னிலையாகவில்லை. அவர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை பெற்று அங்கு ஓய்வு எடுத்து வருகிறார். அதனால் அவர் இந்த மன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்க தவணை ஒன்றை வழங்குமாறு அவரது சட்டத்தரணி மன்றுரைத்தார்.
அதனால் வழக்கு விசாரணையை செப்ரெம்பர் 27ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதிவான் உத்தரவிட்டார்
இந்நிலையில் யாழ்.நீதிவான் நீதிமன்றில் கோட்டாபாய ராஜபக்சே முன்னையாவதை தடுத்து கட்டளையிடுமாறு மேல் முறையீட்டு நீதிமன்றில் அவரது சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனு மீதான விசாரணையின் போது யாழ்.நீதிவான் நீதிமன்று விடுத்த அழைப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் கட்டளை வழங்கியது. குறிப்பிடத்தக்கது. #லலித் #குகன் #விசாரணை #போராட்டம்
Spread the love