பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மீது பெண் ஊடகவியலாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். ஐரோப்பியா கூட்டமைப்பில் இருந்து பிரித்தானியா வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாததால் பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பின் பிரித்தானியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பொரிஸ் ஜோன்சன் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற சில மாதங்களுக்குள் ‘பிரெக்ஸிற்றை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. எனினும் ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் தெரசா மே கண்ட அதே சரிவை பொரிஸ் ஜோன்சனும் எதிர்கொண்டு வருகிறார்.
‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் அவர் நாடாளுமன்றத்தை முடக்கியது சட்டவிரோதமானது என பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இது அரசியல் ரீதியில் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அண்மையில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.
பொரிஸ் ஜோன்சன் லண்டன் மேயராக இருந்த போது, அமெரிக்காவை சேர்ந்த பெண் தொழிலதிபரான ஜெனிபர் ஆர்குரி என்பவரிடம் பணத்தை பெற்று கொண்டு லண்டனில் உள்ள அவரது நிறுவனங்களுக்கு வரி சலுகைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கும் பொரிஸ் ஜோன்சன் சட்டத்துக்கு உட்பட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஜெனிபர் ஆர்குரிக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக கூறுகிறார்.
எனினும் இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது பொரிஸ் ஜோன்சனுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுடன் தற்போது பொரிஸ் ஜோன்சன் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உள்ளது. பிரித்தானியாவின் பிரபல பத்திரிகையில் நிருபராக பணியாற்றி வரும் சார்லோட் எட்வர்ட்ஸ் என்ற பெண் பொரிஸ் ஜோன்சன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார்.கடந்த 1999-ம் ஆண்டு பொரிஸ் ஜோன்சன், பிரபல பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றியபோது அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சார்லோட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘‘விருந்து நிகழ்ச்சியின் போது எனது அருகில் அமர்ந்திருந்த பொரிஸ் ஜோன்சன் என் தொடையின் மீது கை வைத்து தகாத செயலில் ஈடுபட்டார்’’ எனக் கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டையும் பொரிஸ் ஜோன்சன் மறுத்துள்ளார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை ‘கேவலமான பொய்’ என அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே சார்லோட் எட்வர்ட்ஸ் தனது டுவிட்டரில் ‘‘பிரதமருக்கு நடந்த சம்பவம் நினைவில் இல்லையென்றால், அவருக்கு அதனை நான் நினைவுபடுத்துகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் பதவி நிலைக்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், அவர் மீது அடுத்தடுத்து ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பது பிரித்தானிய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.