முல்லைத்தீவு- நீராவியடியில் நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்தும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய வலியுறுத்தியும் யாழ்.நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (05.10.19) காலை இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறி, பௌத்த பிக்குவின் உடல் ஆலய முன்றிலில் எரிக்கப்பட்டதைக் கண்டித்தும் அடாவடியில் ஈடுபட்ட ஞானசார தேரர் மற்றும் அவரது குழுவினரையும் கைது செய்யவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், சாதாரண இளைஞர்கள் செய்கின்ற சிறிய குற்றங்களுக்குத் தண்டனை வழங்கப்படுகின்ற நிலையில் மதத்தை இழிவுப்படுத்திய ஞானசாரர் உள்ளிட்ட ஏனைய பௌத்த பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமைக்குக் காரணம் என்னவென இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘சட்டம் ஒழுங்கு யார் கையில்? அரசே பதில் சொல்’, ‘தேசிய சண்டியனான ஞானசார தேரரைக் கைது செய்’ உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.